ஜேர்மனியில் புகலிடம் மறுக்கப்பட்ட அல்லது தானாக முன் வந்து தாயகம் திரும்ப விருப்பம் தெரிவிக்கும் வெளிநாட்டினர்களுக்கு உதவும் வகையில் புதிதாக ஒரு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜேர்மனியில் புகலிடம் மறுக்கப்பட்ட அல்லது புகலிடத்திற்காக காத்திருக்கும் வெளிநாட்டினர்கள் தாய்நாடுகளுக்கு திரும்பி செல்வது தற்போது மிகவும் குறைந்துள்ளதாக ஜேர்மனியின் குடியமர்வு துறை அலுவகலம் தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு ஜேர்மனியை விட்டு வெளியேறிய வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை 54,096 எனவும், நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் முதல் இந்த எண்ணிக்கை 11,000 ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும், தானாக முன் வந்து தாய்நாடுகளுக்கு திரும்பி செல்ல விரும்பும் வெளிநாட்டினர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி உதவுவதற்காக பிரத்யோகமாக ஒரு தனி இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளத்தில் வெளிநாடுகளுக்கு திரும்பும் அகதிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் பற்றி தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
www.returningfromgermany.de என்ற அந்த இணையத்தளம் தற்போது ஜேர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் உள்ளதாகவும், இனிவரும் காலங்களில் கூடுதலான மொழிகளிலும் தகவல்கள் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.