கண்டி, கடுகண்ணாவை மற்றும் பிலிமத்தலாவை நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள தந்துரை முற்றுமுழுதான ஒரு சிறு முஸ்லிம் கிராமமாகும். இங்குள்ள இளைஞர் ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு எதிரான புத்த பிக்கு ஒருவரின் பேஸ்புக் பதிவில் சூடான வார்த்தைப் பிரயோகங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதனையடுத்து இன்று முன்னிரவில் நோன்பு திறக்கும் நேரம் ஏராளமான இனம்தெரியாத நபர்கள் தந்துரை முஸ்லிம் கிராமத்திற்குள் புகுந்து கண்ணில் எதிர்ப்பட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வீடுகளுக்கும் கல்லெறித் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பான தகவல் அறிந்தவுடன் அமைச்சர் ஹலீம் உடனடியாக மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கிய பணிப்புரையின்பேரில் அப்பிரதேசத்துக்கு பொலிசார் அனுப்பப்பட்டுள்ளனர்.
அத்துடன் பிரதேசத்தின் புத்த விகாரைக்கு நேரடியாக சென்ற முஸ்லிம் குழுவொன்று தமது கிராம இளைஞனின் செய்கைக்கு மனவருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டதன் பின்னர் இனவாதிகள் சற்று ஆத்திரம் தணிந்து, கடுமையான எச்சரிக்கையுடன் அப்பிரதேசத்தை விட்டும் அகன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.