புனித ஹஜ் கடமை என்பது அல்லாஹ்வுடைய சம்மந்தப்பட்ட விடயம். அது நேர்மையாகவும் நேர்த்தியாகவும் அல்லாஹ் பொருந்திக் கொள்ளக் கூடியதாகவும் ஹஜ் யாத்திரையாளர்கள் நன்மை பயக்கக் கூடியதாகவும் சிறந்த முறையில் அமைய வேண்டும் என்ற வகையிலேயே நாங்கள் புதிய சீர்திருத்தங்களுடன் செயற்படுகின்றோம்.
கண்டி மாவட்டத்திற்கு கிடைத்த முஸ்லிம் சமய காலாசார அமைச்சை இன்னுமொரு நபருக்கு திட்டமிட்ட அடிப்படையில் பெற்றுக் கொடுக்கின்ற தீய நோக்குடன் எமது பணிகளைப் பற்றி உண்மைக்குப் புறம்பாக பொய்யான குற்றச் சாட்டுக்களையும் போலியான விமர்சனங்களையும் செய்வோரைக் கண்டு நாங்கள் அடிபணியப் போவதில்லை என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
கல்வி அபிருத்தி மன்றம் 13 வது தடவையாக நடத்தும் ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மடவளை மதீனா தேசிய பாடசாலையின் அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் எஸ் எல் மன்சூல் தலைமையில் (29) இடம்பெற்றது.
அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீமிடம் புனித ஹஜ் விடயம் தொடர்பாக சமூக வலையத்தலங்களில் பரப்புரை செய்யப்படும் விமர்சனங்கள் தொடர்பாக செய்தியார்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கும் போதே அமைச்சர் ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந் கருத்துத் தெரிவிக்கையில் இம்முறை புனித ஹஜ் கடமை செல்வதற்காக 25000 ரூபா அறவிடப்படுவதாகவும் கடந்த காலங்களில் இப்படி அறவிடப்பட்ட பணங்கள் திருப்பி கொடுக்கப்படாமல் இருப்பதாகவும் சமூக வலைத்தலங்களில் பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசேடமாக நாங்கள் இதற்கு முன்னர் எப்பொழுதும் ஹஜ் சம்மந்தமாக நிதி சேர்க்கவும் இல்லை. யாருக்கு கொடுக்க வேண்டிய அவசியமுமில்லை. இருந்த போதிலும் நாங்கள் இந்த ஹஜ் விடயத்தை சிறந்த முறையில் சீராக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி புதிய ஒழுங்குகளை முறைகளை அமுல் நடாத்தி வருகின்றோம்.
விசேடமாக ஹஜ்ஜுக்காக அறவிடப்படும் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் சில வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம.; கடந்த காலங்களில் ஹஜ்ஜின் கட்டணம் எட்டு இலட்சம் ஒன்பது இலட்சம் என்று உயர்ந்த சென் இந்தக் கட்டணத்தை இன்று சில மாற்று வழித் திட்டத்தை அமுல் நடத்துவதன் காரணமாக 4 நான்கு அல்லது நான்கு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அறவிடப்படுகிறது.
இருந்த போதிலும் இன்று இந்த மாற்று வேலைத் திட்டத்தின் காரணமாக பொதுவாக ஹஜ்ஜுக்காகச் செல்லவுள்ள ஹஜ்யாத்திரையாளர்கள் பொதுவாக அவர்களை பெயர்களை எமது முஸ்லிம் சமயம் கலாசாரத் திணைக்களத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டிக் கொண்டுள்ளோம். அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள் மட்டுமே அந்த ஹஜ்ஜை நிறைவேற்றக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் நிச்சயமாக போவதாக இருந்தால் 25000 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அவ்வாறு கட்டப்பட்ட கட்டணம் அவர்கள் ஹஜ் செல்லும் போது நிச்சயமாக அவர்களுடைய கட்டணம் மீளவும் திருப்பிச் செலுத்தப்படும் எனவும் நாங்கள் கூறியிருந்தோம்.
விசேடமாக இப்படியான வேலைத் திட்டத்தை நாங்கள் அமுல் நடத்துவது காரணம் என்னவெனில் இந்தப் புதிய சீர்திருத்தப் பணியின் மாற்றத்தினால் சிலர் பொய் பெயர்களைப் பதிவு செய்து விட்டு பின்னர் வேறோரு நபரின் பெயர்களை பதிவு செய்வதற்கு சில முகவர்கள் முயற்சியில் ஈடுபடபலாம். இத்தகைய தவறுகள் இடம்பெறக் கூடாது என்ற காரணத்தினாலேயே இந்த வேலைத் திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தினோம்.
இன்று கூட ஆயிரக் கணக்கான மக்கள் ஹஜ் செல்வதற்காக பதிவுகள் செய்த போதிலும் கூட சொற்ப தொகையிலான மக்கள் மட்டுமே அவர்கள் ஹஜ் செல்வதற்கான கட்டணம் செலுத்தியுள்ளனர். இதற்காக பற்றுச் சீட்டை திணைக்களம் வழங்கியுள்ளது. இந்தக் கட்டணம் மீளவும் திருப்பி அவர்களுக்கு செலுத்தப்படும். இந்தக் கட்டணம் எனக்கல்ல மீளத் திருப்பி கொடுக்கும் கட்டணமாக எமது திணைக்களத்திற்கு கட்டுமாறு நாங்கள் வேண்டியிருக்கின்றோம். அவர்கள் ஹஜ் செல்லும் சந்தர்ப்பத்தில் அவர்களிடமுள்ள பற்றுச் சீட்டை கொடுத்து பணத்தை மீளப் பெற்றுக் கொள்வாகள்.
எனவே இந்தக் கட்டணம் மீளப் பெறும் கட்டணம் ஆகும்.
எனவே எந்த ஹஜ் விடயத்தில் பிழைகள் ஏற்படாது வகையில் தான் இந்த 25000 ரூபா நாங்கள் அறவிட்டோம். இந்தக் கட்டணம் எனக்கு அல்ல. அதனைத் திருப்பி கொடுக்கவே அறவிடப்படுகிறது. குறிப்பாக திணைக்களத்திற்கு கட்டுமாறுதான் வேண்டியிருக்கின்றோம். எனவே இதுவேதான் என்னுடைய வேலைத் திட்டம்.
கடந்த காலத்தில் வக்கு சபை மற்றும் ஹஜ் சம்மந்தமாகவும் விமர்சனம் இருந்தது. கடந்த காலத்தில் இந்த ஹஜ் குழு எவ்வாறு முன்னெடுத்துச் சென்றார்கள் என்பது நன்கு உலகமே தெரியும். இந்த நாட்டு முஸ்லிம்கள் அறிவார்கள். விசேடமாக அன்றை கால கட்டத்தில் எமது மக்களின் பணம் அநியாயமாக பறிக்கப்பட்டதை நாங்கள் நன்கு அறிவோம். இந்த விமர்சனங்களை மேற்கொள்வோர்கள் என்ன செய்தார்கள் இந்த ஹஜ் விடயத்தில் எத்தகைய ஊழல்களைச் செய்தார்கள் என்பதை எல்லோருக்கும் நன்கு தெரிந்த விடயம்.
தன்னுடைய கடந்த வாழ்க்கைய தன்னுடைய அரசியல் வாழ்க்கையை பற்றி என்னைப் பற்றி உண்மைக்குப் புறம்பாக விமர்சிப்பவர் யாராக இருந்தாலும் மீண்டும் திரும்பிப் பார்ப்பது அவசியமாகும் எனக் கருதுகின்றேன்.
கடந்த காலத்தில் ஹஜ் குழுவினர் எவ்வாறு முன்னெடுத்துச் சென்றார்கள். வக்பு சபை கடந்த வருடத்தில் எவ்வாறு தம் கடமையைச் செய்தது என்பதை எல்லோரும் அறிவார்கள். எமது குறுகிய காலத்தில் சிறந்த மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம்.
நாங்கள் பணிகளை சுய அடிப்படையில் இயங்க வில்லை. தலை சிறந்த மார்க்க அறிஞர் சிறந்த சட்ட வல்லுனர்கள் வழக்கறிஞர்கள் போன்ற பெரும் தகைமையுடையவர்கைத் தான் இந்த இரு சபைகளுக்கும் நான் நியமனம் செய்துள்ளேன். ஆகவே இதில் பிழைகள் இடம்பெறுவதற்கு ஒரு போதும் இடம் இல்லை.
ஏதாவது பிழைகள் இருக்குமானால் அதனைச் சுட்டிக் காட்டுவதற்கு யாருக்கும் சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால் பொய்யான போலியான குற்றச் சாட்டுக்களுக்கு நாங்கள் அடிபணியப் போவதில்லை. என்னுடைய தந்தை கூட ஒரு மார்க்க அறிஞர். அந்த வகையில் நாங்கள் சரியான இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் வளர்க்கப்பட்டுள்ளோம். நான் முஸ்லிமா முஸ்லிம் இல்லையா என்பதை பார்ப்பது அல்லாஹ்வின் செயலாகும், ஒவ்வொருடைய ஈடுமானின் உறுதியைப் பொறுத்தமு. இது இன்னுமொருவர் கூறும் விடயமோ பார்க்கும் விடயமோ அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கத்தில் கல்விக்காக ஒரு போதும் இல்லாதளவுக்கு பாரிய நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு கல்வி அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யபட்ட அனைத்துப் பாடசாலைகளும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. கல்வி அபிவிருத்தி மன்றத்தின் பணி பாராட்டத்தக்கது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இக்பால் அலி
பானகமுவ நிருபர்