அண்மைக் காலமாக முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கும் எதிராக நடைபெற்று வரும் சம்பவங்களுக்கு பொலிஸார் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இதுவரை எவரும் கைது செய்யப்படவும் இல்லை. அரசு இவற்றைப் பார்த்துக் கொண்டிருக்காது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் பாரிய விளைவுகள் ஏற்படும் என்று பிரபல ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்தார்.
மறுமலர்ச்சி இயக்கம் கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்த, ‘முஸ்லிம் கடைகளுக்கெதிரான தாக்குதல்கள்’ எனும் தலைப்பிலான ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அதன்போது
அவர் தொடர்ந்து கூறியதாவது,
நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கெதிரான வன் செயல்களை நாம் அனைவரும் ஒன்றிணைந்து கண்டிக்க வேண்டும். நாம் முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவும் அவர்களது உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும், அதற்காக போராடவும் வேண்டும்.
நாட்டை எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் சரி, சிறுபான்மை சமூகங்களைப் பாதுகாப்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமையாகும். பௌத்த அடிப்படைவாதிகள் மட்டுமல்ல, முஸ்லிம் அடிப்படைவாதிகள், தமிழ் அடிப்படைவாதிகள் அனைவரதும் அனைத்து செயற்பாடுகளையும் நாம் எதிர்க்க வேண்டும். முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டுவரப்படாவிட்டால், நாடு அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்லப்படும்.
1983 ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தை நாம் பார்த்தோம். அதனால் விளைந்த அழிவுகளையும் நாம் இன்னும் மறந்து விடவில்லை. அதில் தமிழ் மக்கள் அழிவுக்குள்ளானார்கள். அதனால்தான் தற்போது நடைபெறும் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம் என நாம் அரசுக்குக் கூறுகிறோம்.
1983 ஆம் ஆண்டு கலவரத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸார் சிங்கள மக்கள் சார்பாக இருந்ததாலேயே பாரிய அழிவுகள் ஏற்பட்டன. பேருவளை, அளுத்கமை சம்பவத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த வன் செயல்களின் போதும் இராணுவத்தினர் சிலரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இதனாலேயே அப்போதும் பாரிய அழிவுகள் ஏற்பட்டன.
பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுவோர் பக்க சார்பாக நடந்து கொள்வது நல்லதல்ல. ஆனால் 1957 ஆம் ஆண்டு நிகழ்ந்த இனக்கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. இராணுவம் பக்க சார்பற்ற முறையில் செயற்பட்டதாலேயே அந்தக் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ARA. FAREEL