சுவிட்சர்லாந்து நாட்டில் லொறி மீது ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் ரயிலில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூரிச் மாகாணத்தில் உள்ள Horgen மற்றும் Au ஆகிய நகரங்களுக்கு இடையில் தான் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. சுவிஸ் நேரப்படி இன்று காலை 9.30 மணியளவில் பயணிகள் ரயில் ஒன்று சூரிச் ரயில் நிலையம் நோக்கி பயணம் செய்துள்ளது.
தண்டவாளம் மற்றும் சாலையை இணைக்கும் பகுதிக்கு அருகே ரயில் வந்தபோது திடீரென லொறி ஒன்று தண்டவாளத்தின் குறுக்கே சென்றுள்ளது. வேகமாக வந்த ரயிலை நிறுத்தவது கடினம் என்பதால் லொறி மீது ரயில் மோதி லொறியை இழுத்துச்சென்றுள்ளது.
ஆனால், விபத்து நிகழப்போகிறது என்பதை அறிந்த லொறி ஓட்டுனர் கண் இமைக்கும் நேரத்தில் லொறியில் இருந்து கீழே குதித்துள்ளார். சில மீற்றர் தூரம் வரை லொறி இழுத்துச்செல்லப்பட்ட பிறகு ரயில் நின்றுள்ளது. இவ்விபத்தில் ரயில் பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் நிகழவில்லை.
ஆனால், லொறி ஓட்டுனர் மட்டும் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். விபத்து நிகழ்ந்ததற்கான காரணத்தை பொலிசார் மற்றும் ரயில் நிலைய அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர்.
தண்டவாளத்தில் லொறி மீது ரயில் மோதியதால் மாலை 4 மணி வரை அவ்வழியாக செல்ல இருந்த ரயில்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. மேலும், ஆஸ்திரியா நாட்டில் இருந்து இவ்வழியாக பயணமாக இருந்த ரயில் ஒன்று மாற்றுப்பாதையில் அனுப்பப்பட்டதாக ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.