சிரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கு எதிராகப் போராடிவரும், ஐக்கிய அமெரிக்காவால் ஆதரவளிக்கப்படும் சிரிய ஆயுததாரிகள், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவிடமிருந்து தக்பா நகரம் முழுவதையும் கைப்பற்றியுள்ளதோடு, சிரியாவின் மிகப்பெரிய அணையையும் கைப்பற்றியுள்ளனர்.
குர்திஷ், அரேபியப் போராளிகளைக் கொண்ட சிரிய ஜனநாயகப் படைகள் என்ற போராளிகள் குழு, தக்பா நகரத்தில், கடந்த சில வாரங்களாகப் போராடி வந்தது. இந்நிலையிலேயே, தக்பா நகரம் கைப்பற்றப்பட்டுள்ளது.
“சிரிய ஜனநாயகப் படைகளின் நாயகர்களின் தியாகம் காரணமாகவும், ஐ.அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் மட்டுப்பாடில்லாத ஆதரவு காரணமாகவும், தக்பாவைக் கைப்பற்ற முடிந்தது” என, அந்தக் குழுவின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
தக்பாவுக்கு அருகில் காணப்பட்ட அணையும், தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகத் தெரிவித்த அக்குழு, நகரத்திலிருந்தும் அணையிலிருந்தும், ஐ.எஸ்.ஐ.எஸ் குழு, முற்றுமுழுதாக விரட்டியடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது. ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவைத் தோற்கடிப்பதற்கான பூகோளக் கூட்டணிக்கான ஐ.அமெரிக்காவின் விசேட ஜனாதிபதித் தூதுவரான பிரெட் மக்கேர்க், தக்பா நகரம் கைப்பற்றப்பட்ட செய்தியை உறுதிப்படுத்தினார்.
தக்பா நகரம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், றக்கா நகரத்தை இலக்குவைக்கும் பணி, தற்போது இலகுவாக்கப்பட்டுள்ளது என்று கருதப்படுகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் பிரதான கட்டளைப் பகுதியான றக்காவைக் கைப்பற்றும் பணி, தக்பா மீதான நடவடிக்கை காரணமாகத் தாமதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.