நயினாதீவில் நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை; பதற்றத்தில் தமிழ் மக்கள்

NEWS


சேகு

தமிழ் மக்கள் அனைவரதும் எதிர்ப்புக்களையும் மீறி நயினாதீவின் கடற்பரப்பில் 78 மில்லியன் ரூபாய் செலவில் 67 அடி உயரமான  புத்தர் சிலை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நயினாதீவு நாக விகாரைக்கும், நயினா நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கும், இடைப்பட்ட இடத்தில், 67 அடி உயரமான புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கான நடவடிக்கை நாகவிகாரையின் விகாராதிபதியால் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதியில் புத்தர்சிலை அமைக்கப்பட்டால், கடல் வெளிப்பரப்பில் நாகபூசணி அம்மன் ஆலயம் மறைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும்,  அங்கு சிலையை நிறுவி இன,மத நல்லுறவை பாதிப்படைய செய்ய வேண்டாம் என தமிழ் மக்கள் தரப்பில் இருந்து பலர் தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

மிக சிறப்பு மிக்க சைவ ஆலயம் எழுந்தருளியுள்ள நயினாதீவு பிரமாண்டமான புத்தர் சிலையை அமைத்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வரலாற்றில் மாற்றங்களை ஏற்படுத்தும் செயல் என பலரும் இதனை விமர்சித்துவந்தனர்.
கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதி பெற்ற பின்னரே குறித்த வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவேண்டும் எனவே கரையோர பாதுகாப்பு திணைக்கழத்தின் அனுமதியை பெற்ற பின்னர் தான்  சிலை அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட அரச அதிபரால் நயினாதீவு நாக விகாரை விகாராதிபதிக்கு கடிதம் கடந்தவருடம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அனுமதிகள் பெறப்படாத நிலையில்,கடற்படையினரின் உதவியுடன் நேற்று முன்தினம் வெசாக் ஆரம்ப தினத்தில் குறித்த புத்தர் சிலை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
6/grid1/Political
To Top