எம்.எஸ்.எம்.ஹனீபா
அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எல்லைக் கிராமங்களில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அட்டாளைச்சேனைக்கான அமைப்பாளர் கலாநிதி வை.எல்.நிஸார் ஹைதா, இந்த யானைகளின் தொல்லையைக் கட்டுப்படுத்துவதற்காக மின்சார வேலி அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'ஒலுவில், அஷ்ரப் நகர், சம்பு நகர், ஹிறா நகர் ஆகிய கிராமங்களிலேயே காட்டு யானைகளில் தொல்லை அதிகமாகக் காணப்படுகின்றது. அக்கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் அச்சத்துடன் இரவு வேளைகளில் இருக்கின்றனர். யானைகளின் அச்சம் காரணமாக பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து மாலை வேளைகளில் வெளியேறி, பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்கின்றனர். மேற்படி கிராமங்களினுள் இரவு வேளைகளில் கூட்டங் கூட்டமாக நுழையும் யானைகள், வீட்டுத் தோட்டங்களையும் சேனைப் பயிர்களையும் சேதப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.