இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் முஸ்லிம்கள் தெளிவாக ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இனப்பிரச்சினை தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகளையும் - பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று புதன்கிழமை விடுத்த அறிக்கையிலேயே பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் வடக்கும் கிழக்கும் இணைவது இயற்கையானது என்றும், முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு வழங்குவதற்கு எதிராக தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்தை வன்மையாகக் கண்டித்து நான் அண்மையில் காத்தான்குடியில் பேசியிருந்தேன். இதன் போது, வடகிழக்கு இனப்பிரச்சினை தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தமது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டும் என நான் கோரிக்கை விடுத்திருந்தேன். அதற்கமை மிக விரைவிலேயே அது தமது நிலைப்பாட்டை தெளிவுடுத்தியிருந்தது.
வடகிழக்கு இனப்பிரச்சினை தொடர்பில் அது வெளியிட்டிருந்த அறிக்கையில், வடக்கும் கிழக்கும் பிரிந்துள்ள நிலையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அதிகாரப் பகிர்வு சகல மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நீதியாக அமைய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இவ்வாறு வெளியிட்ட அறிக்கையை அதன் செயலாளர் சகோதரர் நஜா முஹம்மத் எனக்கும் அனுப்பி வைத்திருந்தார். ந.தே.முவின் தெளிவுபடுத்தலுக்கு எனது பாராட்டுக்களையும் - நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
வடகிழக்கு பிரச்சினை தொடர்பில் முஸ்லிம்கள் அனைவரும் தெளிவாக ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். எங்களுக்கு மத்தியில் வித்தியாசமான கொள்கைகள்- கருத்துகள்- போக்குகள் இருக்குமாயின் அது எமது சமூகத்துக்கு எதிர்காலத்தில் பெரும் பாதிப்பையும் - தாக்கத்தையும் ஏற்படுத்தும்.
அந்தவகையில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் வடக்கும் கிழக்கும் பிரிந்து தான் இருக்க வேண்டும் என தமது நிலைப்பாட்டை தெளிபடுத்தியது வரவேற்கத்தக்கதாகும். என அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
R.Hassan