முஸ்லிம்களை இந்நாட்டிலிருந்தும் சவூதிக்கு வெளியேற்ற வேண்டும்' என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் கருத்துகளை வெளியிட்டு நாட்டில் ஓர் இனக்கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறார். எனவே அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம்.அஸ்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ள முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகள் தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முஸ்லிம்கள் எப்போதும் பெரும்பான்மை சமூகத்துடன் மாத்திரமல்லாது ஏனைய சமூகத்தினருடனும் நல்லுறவுடன் வாழ்பவர்கள். வெசாக் நிகழ்வுகளிலும் அன்னதானங்களை பெரும்பான்மை இனத்தவருடன் இணைந்து நாட்டின் பல பகுதிகளில் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
முன்னாள் அமைச்சர் லக் ஷ்மன் கதிர்காமர் ஐ.நாடுகள் சபையில் அன்று விடுத்த வேண்டுகோளையடுத்தே ஐ.நாடுகள் சபையின் மேற்பார்வையின் கீழ் இவ்வருடம் இலங்கையில் சர்வதேச வெசாக் நிகழ்வு கொண்டாடப்படுகிறது. இந்தியப் பிரதமரும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார். சிறுபான்மை இனத்தவர் ஒருவர் விடுத்த கோரிக்கையை அடுத்தே சர்வதேச வெசாக் நிகழ்வு நடைபெறுகிறது.
இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லுறவும் நல்லிணக்கமும் தேசிய ஒருமைப்பாடும் பலப்படுத்தப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் ஞானசார தேரர் நாட்டில் இனமுறுகல்களை உருவாக்க முயற்சிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நீதிமன்றில் ஞானசார தேரருக்கு எதிராக பல வழக்குகள் உள்ளன. பெரும்பாலான வழக்குகள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டமைக்காக தொடரப்பட்டனவாகும்.
ஞானசார தேரர் விடயத்தில் ஜனாதிபதி அமைதி காக்கக்கூடாது.
இனவாதத்தை தூண்டி நாட்டில் அழிவுகளை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பௌத்த தேரர்கள் என்றாலும் கருணை காட்டக்கூடாது. அவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ARA.Fareel