Top News

ஹனீபா மதனி, நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு அவசர மடல்




(சப்றின்)

முஸ்லிம் மக்களுக்கு பொதுபல சேன அமைப்பினால் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலை தொடர்பிலும், அதனை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கூறி அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி, நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு அவசர மடல் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அம்மடலில் 2011ம் ஆண்டு றமழான் நோன்பு ஆரம்பிக்க சில நாட்கள் இருக்கும் தறுவாயில் சிறுபான்மை மக்கள் வசிக்கும் பிரதேசங்களில் குறிப்பாக முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் 'கிறீஸ் பூதம்' எனும் ஒரு புரளி ஏற்படுத்தப்பட்டது. இதனால் சிறுபான்மை மக்கள் சீவிக்கும் கிராமங்கள் தோறும் இரவு நேரங்களில் அச்சமும் பீதியும் நிறைந்து காணப்பட்டன. 

நோன்பு காலத்தில் விசேஷ இரவு வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் முஸ்லீம்கள் அதனைச் செய்ய முடியாதவாறு நிலமைகள் சிக்கலாயின. கிறீஸ் பூதங்களினால் சிலருக்கு ரத்தக் காயங்கள் ஏற்படுத்தப்பட்டன. இன்னும் சிலருடைய வீடுகள் எரித்து நாசமாக்கப்பட்டன. 

இப்பூதங்களின் அட்டகாசங்கள் பொறுக்க முடியாமல் நீதி தேடி பதில் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளாக்கப்பட்டனர்.  கிண்ணியா, புத்தளம், பொத்துவில், இறக்காமம் போன்ற கிராமங்களில் இது மிகக் கொடூரமாக அமைந்திருந்தது. பல உயிர் இழப்புக்களே ஏற்பட்டுவிட்டன.

 இப்பூதங்களின் அட்டகாசங்கள் முடிவுக்குவர பல காலங்கள் கடந்துவிட்டன. சட்டமும், நீதியும் இதனை கண்டுகொள்ள மறுத்தன. கிறீஸ் பூதங்களின் திரு விளையாடல்கள் வட கிழக்கு, மலையகங்களில் நடைபெற்று கொண்டிருந்த வேளை தென்பகுதியில் வெறுப்பூட்டும் பல நடவடிக்கைகள் சரளமாக ஏற்படுத்தப்பட்டன. 

சட்டத்தின் ஆட்சி நடைபெறும் ஓர் ஜனநாயக நாட்டில் சட்டத்தை பகிரங்கமாக கையில் எடுத்து கெடுபிடிகள் நடாத்திக் கொண்டிருந்த பொதுபல சேனாவின் பின்னணியில் அப்போதய பாதுகாப்பு செயலாளர் இருப்பதாக மிக பரவலாகவே ஊடகங்களில் பேசப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஒத்தாசை வழங்குவதாக கூறப்பட்டது. 

இவ்வாறு மக்கள் பேசுவதற்கு ஓர் முக்கிய காரணமும் இருந்தது. அதாவது பொதுபல சேனாவின் பயிற்சிக் கலாசார நிலையத்தை காலி மாவட்டத்தின் பிளன வஞ்சவல எனும் இடத்தில் 2013 மார்ச் 9ந் திகதி திறந்து வைப்பதற்கு பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய அவர்கள் அங்கு சென்று இருந்தமையேயாகும்.

2017ம் ஆண்டுக்குரிய புனித நோன்புமாதம் வர சில வாரங்கள் இருக்கும் நிலையில் கலபொட அத்த ஞானதேரர் அவரது நடவடிக்கைகளை தற்போது மீண்டும் வெளிப்படையாக பொலன்னறுவை ஓணகம பகுதியில் ஆரம்பித்துள்ளார். முஸ்லிம்களின் குடியிருப்புகளை பொலிஸ் அதிகாரிகளின் முன்னிலையிலேயே உடைத்து எறிந்துள்ளார். இவருடைய இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து கொஹிலவத்தை, பாணந்துறை, மல்லவபிட்டிய பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல்கள் இரவு நேரங்களில் குண்டெறிந்து தாக்கப்பட்டுள்ளன. 

அத்தோடு பாணந்துறையிலும் எரிவிலயிலும், வென்னப்புவயிலும் பின் அம்பாறை மஹறகம, கஹவத்தை ஆகிய இடங்களில் தமிழ் முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார ஸ்தலங்கள் தீயிட்டு எரித்து நாசமாக்கப்பட்டிருக்கின்றன. பொதுபல சேனாவின் நோன்பு மாதத்திற்கு முன்னரான இந்நிகழ்ச்சிகள் 2011ம் ஆண்டில் நோன்பு மாதத்திற்கு முன்பு நடை பெற்றதை ஒத்ததாக விருப்பதை நாம் உணரக் கூடியதாக இருக்கின்றது. இருந்தபோதும் அப்போது பாதுகாப்புச் செயலாளர் பக்கம் நீட்டப்பட்ட விரல்கள் இப்போது இதுவரை யார் பக்கமும் தெளிவாக நீட்டப்படவில்லை.

வடகிழக்கில் ஆயுத போராட்டம் நடைபெற்றபோதும் இவ்வாறே முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வியாபார ஸ்தலங்கள் ஆயுததாரிகளால் தீக்கிரையாக்கப்பட்டன. நிராயுத பாணிகளான முஸ்லிம்கள் தம்மையும் தமது உயிர் உடைமைகளையும் தற்பாதுகாத்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு துவக்குகள் வழங்கப்பட்டு ஊர்காவல் படைகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டன. 

ஞானசார தேரரும் அவர்களின் குழுவினரும் யுத்தகாலத்தில் பயங்கரவாதிகள் முஸ்லிம்களின் பள்ளிகளையும் வியாபார ஸ்தலங்களையும் இரவு வேளைகளில் குண்டு வைத்து தகர்த்தது போன்றதொரு நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். வடகிழக்கில் யுத்தம் நடைபெற்ற போது ஆயுதம் ஏந்தி போராடியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியாதது போன்ற ஓர் துற்பாக்கிய நிலையே ஞானசார தொடர்பாகவும் தங்களுக்கு தற்போது ஏற்பட்டிருப்பதை சமகால நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. 

ஞானசாரர் நீதிமன்ற கட்டளைகளை கிழித்து எறிகின்றார். அமைச்சுகளுக்குள் நுழைந்து அமைச்சர்களை அச்சுறுத்தி அவமானபடுத்துகின்றார். இவ்வாறே 2014இல் முஸ்லிம்களுக்கு எதிராக அளுத்கம கலவரத்தை ஏற்படுத்தி உயிர்களுக்கும், உடைமைகளுக்கும், நாட்டின் சொத்துகளுக்கும் அழிவை ஏற்படுத்தியிருக்கிறார். தற்போது நாட்டில் பிரதமரையும் ஜனாதிபதியையும் தூசன வார்த்தைகளால் ஏசித்தள்ளுகிறார். 

இந்த நாட்டின் பெரும்பான்மை பௌத்த மக்கள் போற்றி புகழ்கின்ற மகாவம்சத்தைக் கூட பிழையானது என்று பகிரங்கமாக பிரஸ்தாபிக்கின்றார். இது எல்லாவற்றையும் விட மேலாக உலகின் 250 கோடி முஸ்லீம்கள் தமது உயிரிலும் மேலாக மதிக்கின்ற அழ்ழாஹ்வையும் அவனது இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் முஸ்லீம்களின் மனம் புண்படும் வகையில் தூசிக்கின்றார். இவை யாவற்றையும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய பொலிஸாரும் சில வேளை இராணுவத்தினரும் வேடிக்கை  பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

யுத்த காலத்தில் சட்டம் நடைமுறைபடுத்த முடியாமல் இருந்தமையினால் தமது உயிர் உடைமைகள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றைப் பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கிகள் வழங்கப்பட்டு ஊர்காவல் படைகள் கிராமங்கள் தோறும் நிறுவப்பட்டது போல் தற்போதும் முஸ்லீம் கிராமங்கள் தோறும் ஊர்காவல்படையை ஏற்படுத்தி துப்பாக்கிகளையும் வழங்கி வைக்க முடியுமா என யோசியுங்கள். இதன் மூலம் இந்த ஞானசாரரின் நாசகார வேலைகளை இலகுவில் கட்டுப்படுத்தி விடுவதுடன் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கின்ற கையறு நிலையையும் தீர்த்துக் கொள்ளலாம். 

புத்த பெருமானின் போதனைகள் பொதுவாக அன்பு, கருணை, பணிவு என்பவற்றைக் கடைப்பிடிக்கவும் குரோதம், வைராக்கியம், பெருமை பொறாமை என்பவற்றை தவிர்ந்து நடக்கவும் கட்டளையிடுகின்றன. இவை இந்த ஞானசாரரிடம் காணப்படுகின்றனவா என்பதையும், புத்த பெருமான் பௌத்த துறவிகளுக்கு வழங்கிய விஷேச அறிவுரைகளாகிய தியானம், தவம், நிர்வாணம் போன்ற குணங்களும் இவரிடம் காணப்படுகின்றதா என்பதையும் மகா நாயக்க தேரர்களும், புத்தசாசன அமைச்சும் கூர்ந்து கவனிக்க வேண்டி தருணத்தில் நம்நாடு இருக்கின்றது.  

ஞானசார தேரருடன் கூடி வாழ்ந்து அவருடன் பிரயாணம் செய்து அவரின் இயக்கத்தில் பங்கு கொண்டவர்கள் இவரிடம் கெட்ட பழக்கங்கள் உள்ளதாகவும் இவர் உலக இன்பங்களை அனுபவிக்கும் ஆசை மிக்கவராகவும் காணப்படுகின்றார் என்று பிரஸ்தாபிக்கின்றனர். பொதுபல சேனாவின் தலைவராகவிருந்த கிரம விமலஜோதி தேரர் அவர்கள் 2015 மே மாதமளவில் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. 

அவர் அவ்வாறு இராஜினாமாச் செய்வதற்கு அவர் தெரிவித்த காரணமாவது பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் புத்த பெருமானின் போதனைகளுக்கு முற்றிலும் எதிராக அமைந்துள்ளதுடன் பெரும் அழிவை ஏற்படுத்திய அளுத்கம கலவரத்தை ஏற்படுத்துவதில் அது சம்பந்தப்பட்டிருக்கின்றது என்பதுமாகும். ஞானசார தேரரோடு இயக்கம் நடாத்திய கிரம விமலஜோதி தேரர் அவர்களின் கருத்தை நாம் கருத்திற் கொள்ளவேண்டும் என எண்ணுகின்றேன். 

இதே போன்று இவர் மது போதையில் வாகனம் ஓட்டிய நேரத்தில் இவருக்கு எதிராக பொலிஸ் நடவடிக்கை நடைபெற்ற விடயமும் பத்திரிகைகளில் மிகப் பிரபல்யமாக பேசப்பட்டு வருகின்றது. 

ஞானசார தேரருக்கு சில காலம் தொண்டராகப் பணியாற்றிய ஜாஎல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இவர் பற்றி ஊடகங்களில் பின்வருமாறு தெரிவித்திருக்கின்றார். இவர் சோம ராம தேரர் போன்று பௌத்த இராச்சியம் அமைப்பதாகச் சொல்லிக் கொண்டு வந்தார். ஆனால் தமது சொந்த சொகுசான வாழ்க்கைக்காகவே இந்த பொதுபல சேனாவை அவர் நடாத்திக் கொண்டிருக்கின்றார். இவருக்கு மனோஜா என்ற பெயரையுடைய ஓர் பெண்ணும், இரு பெண் குழந்தைகளும் பிரான்சில் இருக்கின்றனர். 

இவர்கள் இலங்கை வருகின்ற வேளைகளில் கூடிய விலையில் சொகுசான ஹோட்டல்களை பதிவு செய்து கொண்டு மிக உல்லாசமாக அங்கு படுத்துறங்குவார்கள். இவர்களின் போக்கு வரத்துக்கு எனது பி.எம்.டபிள்யூ ரக வாகனத்தை இவர்கள் பாவிப்பார்கள். ஒரு பிரபலமான தேரராகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் இவர் ஒரு சுற்றுலாப் பயணி போன்று பெண்களுடன் சேர்ந்து நீர் வீழ்ச்சிகளில் குளித்து மகிழ்வார். இவ்வாறு இவர் நடந்து கொள்வதைக் காண்பதற்கு எனக்கு மிகவும் அருவருப்பாகவிருந்தது. ஞான சாரருடன் தொண்டனாகப் பணியாற்றிய ஜாஎல பிரதேச சபை முன்னாள் உறுப்பினரின் இக்கருத்தையும் நீங்கள் மிக்க ஆழமாகக் கருத்திற் கொள்ள வேண்டியிருக்கிறது. 

மிக அண்மையில் தீகவாப்பிய பரிவார சைத்திய ரஜ மஹா விகாரையின் பிரதம பௌத்த குருவான, போத்திவல சந்தானந்த தேரர் இந்த ஞான சார தேரர் இறக்காமத்தின் மாயக்கல்லி மலையில் பன்சல அமைக்க வந்த போது பின்வருமாறு தெரிவித்தார். 'மாயக்கல்லி மிக நீண்ட காலமாக முஸ்லீம்களின் பூமியாக இருந்து வருகின்றது. அவர்களின் பூர்வீகக் காணியில் இருந்து அவர்களைப் பலாத் காரமாக வெளியேற்றிவிட்டு விஹாரை அமைக்க வேண்டிய எந்தத் தேவையும் இங்கு இல்லை. மாணிக்க மடுவுக்கு மிக அண்மையிலேயே திகவாப்பியும் அதன் மிகப் பெரிய பன்சலையும் இருக்கின்றது'. 

'மாணிக்கமடு மாயக்கல்லி விடயத்தில் அம்பாறை மாவட்டத்தின் அதிகமான சிங்கள மக்கள் கவலையடைந்துள்ளனர். இங்குள்ள பௌத்த மக்கள் தமிழ் முஸ்லீம் மக்களுடன் மிக நல்லுறவைப் பேணி வருகின்றனர். மேலும் இங்குள்ள பிரச்சினைகள் பற்றிப் பேசி தீர்த்துக் கொள்ள இங்கு நாம் இருக்கின்றோம். ஞான சார இங்கு வரவேண்டிய எந்தத் தேவையும் கிடையாது. அவர் இனங்களுக்கிடையில் குளப்பம் ஏற்படுத்துபவர். இவர் விடயத்தில் முஸ்லீம்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்' என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். 

தீகவாப்பி பிரதம குருவின் இந்தச் செய்தியும், வேண்டுகோளும் புத்தசாசன அமைச்சு, சட்டம் ஒழுங்கு அமைச்சு மற்றும் அரசாங்கம் ஆகியவற்றின் தீவிர கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டிய முக்கிய விடயங்களாகும். 

எனவே இவர் ஒரு பௌத்த துறவியா? இல்லையா? என்பதையும் இவர் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றாரா? என்பதையும் தீர்மானிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆவன செய்யுங்கள். பின் அதுபற்றி இந்த நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்துங்கள் அதுவரையில் இவரும் இவருடன் தொடர்புடையவர்களும் மேற்கொள்ளும் இராத் தாக்குதல்களில் இருந்து தற்பாதுகாப்பு பெறும் வகையில் முஸ்லீம் கிராமங்களில் ஊர்காவல் படைகளை உருவாக்கி அவர்களுக்கு துப்பாக்கிகளையும் வழங்கி வைக்க முடியுமா என்று யோசியுங்கள். தவறும் பட்சத்தில் இதனால் அவமானப்படப்போவது இந்த நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் நல்லாட்சி அரசாங்கமும் குறிப்பாக புத்தசாசன, மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றிற்குப் பொறுப்பான அமைச்சர்களுமாகும்.

92 வீதம் அறிவு மட்டத்தை கொண்ட மிக அழகிய இந்த சிறிய நாட்டில், சமாதானத்தையும் சக வாழ்வையும் விரும்புகின்ற பௌத்த தர்மத்தை நேசிக்கின்ற பெரும்பான்மை மக்கள் சீவிக்கின்ற இந்த பூமி இன்னுமொரு யுத்தத்தால் சீரழியக்கூடாது என்பதை நினைத்து தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தயவாய் வேண்டுகின்றேன். 

ராஜ வாழ்க்கையில் திளைத்திருந்த புத்த பெருமானின் வாழ்க்கையில் திருப்பத்தையும், மனதில் மாற்றத்தையும் ஏற்படுத்திய அந்த வயோதிபரும், நோயாளியும், முற்றும் துறந்த முனிவரும், அழுகிக் கிடந்த பிணமும் ஏற்படுத்திய தாக்கங்கள் ஏன் ஞானசார தேரரில் ஆதிக்கம் செலுத்த மறுக்கின்றன என்பது பற்றி இந்த நாடே வினாவிடுத்து இன்று ஏங்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம் மடலின் பிரதி சட்டம், ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
Previous Post Next Post