சியோனிச இஸ்ரேலுக்குச் சிம்ம சொப்பனமாக இருக்கும் நாடுகளில் மிக முக்கியமான நாடு வடகொரியா. அமெரிக்காவின் தயவு நாடி அரபு நாடுகளிற் சில கூட இஸ்ரேலுடன் நட்புப் பாராட்டினாலும் தன்னுடைய மிக மோசமான எதிரியாக இஸ்ரேலைக் கருதும் நாடுதான் வடகொரியா.
ஆசியாக் கண்டத்தின் இரண்டு எதிரான முனைகளில் இருக்கின்ற வடகொரியாவுக்கும் இஸ்ரேலுக்குமிடையில் எல்லைப் பிரச்சினைகள், அகதிகள் ஊடுருவல் போன்ற எந்தப் பிரச்சினைகளும் கிடையாது. ஆனாலும் இஸ்ரேலை ஒரு நாடாக வடகொரியா இன்னமும் அங்கீகரிக்கவில்லை. மாறாக, பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை மிக வன்மையாக விமர்சனம் செய்து வருகிறது வடகொரியா.
இஸ்ரேலின் தாக்குதல் பட்டியலில் இருக்கும் பல அரபு நாடுகளுக்கு வடகொரியா வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் உதவி வருகிறது. ஆயுத விநியோகங்களை மேற்கொள்கிறது. இதன் மூலம் இஸ்ரேலுக்கெதிராகத் தாக்குப் பிடிக்கும் வலுவை அந்த அரபு தேசங்களுக்குத் தன்னால் முடிந்தளவு வழங்க முற்படுகிறது வடகொரியா. இவ்வாறு அரபு தேசங்களுக்கு சக்தி வாய்ந்த ஏவுகணைகளையும் போராயுதங்களையும் வடகொரியா வழங்குவதாக 2008 ம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் சபையில் புலம்பிய இஸ்ரேல் இன்றும் வடகொரியா மீது அந்தக் குற்றச்சாட்டைச் சமயம் கிடைக்கும் போதெல்லாம் சுமத்திக் கொண்டே இருக்கிறது.
அதுமட்டுமல்ல...வடகொரியாவின் நியூக்கிளியர் ஏவுகணைத் திட்டத்திற்கெதிராக உலக நாடுகள் ஒன்று திரண்டு போராட வேண்டுமென 2013ம் ஆண்டு பீதியில் பெருங்குரலெடுத்துக் கத்திய நாடுதான் இஸ்ரேல்.
இவ்வாறு இஸ்ரேலின் கண்களுக்குள் தனது கூரிய நகங்களை விட்டு விளையாடும் வடகொரியா இரண்டொரு தினங்களின் முன்னர் 'இஸ்ரேலுக்கு ஆயிரம் மடங்கு தண்டனை வழங்கி அழிப்போமெ'ன எச்சரித்துள்ளது. 'வடகொரியா அதிபருக்குப் பைத்தியம் பிடித்துள்ளது' என்று இஸ்ரேல் கூறிய கூற்றுக்குப் பதிலாகவே வடகொரியா மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எஸ். ஹமீத்
எஸ். ஹமீத்