Top News

உண்மைகளை வெளியிட்டார் பசீர்; குமாரியின் விடயம் முதலில் அம்பலம்!!



டந்த சில வாரங்களாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுக்கொண்டிருந்த வன்முறையினால் ஒட்டு மொத்த சமூகத்துக்கும் ஏற்பட்டிருந்த பீதி, கவலை, ஆத்திரம் கலந்த மனோநிலை கொஞ்சம் தள்ளிச் சென்று , கடந்த 25 ஆம் திகதி வியாழக் கிழமை தொடக்கம் அருள் நிறைந்த றமழான் மாதம் பற்றிய ஆன்மீக உணர்வு மெல்ல மெல்ல இஸ்லாமிய நெஞ்சங்களை நிரப்பத் தொடங்கியிருந்தது.
றமழான் தலைப் பிறை காண்பது பற்றி இலங்கை முஸ்லிம்கள் மும்முரமாக அக்கறை கொள்ளத் தொடங்கிய வேளை எனக்கு ஒரு செய்தி மிக இரகசியமாக எத்தி வைக்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் தலை நோன்பு நோற்க இருந்த அன்று - சஹர் வேளைக்கு சற்று முன்பதாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் "கார்ணிவல் " வீட்டு முற்றத்தில் குமாரி கூரே எரிந்து இறந்து போனார்.
"இவ்வருடத் தலை நோன்பு அன்று குமாரியின் குடும்ப உறுப்பினர் சிலரும், சில சிங்கள மாதர் அமைப்புகளும் இணைந்து குமாரியின் அகால மரணத்துக்கான காரணத்தை அறிய மீள் விசாரணை ஒன்றைக் கோரியும், அவரின் குடும்பத்தாருக்கு நீதி வேண்டியும் தலைவரின் கொள்ளுப்பிட்டி, அல்பிரட் பிளேஸ் வீதியில் அமைந்திருக்கும் தற்போதைய வீட்டிற்கு முன்னால் கால வரையறையற்ற தொடர் போராட்டம் ஒன்றைத் தொடங்கப் போகிறார்கள்
என்பதே, இவ்வருடத் தலை நோன்பு நெருங்கி வந்த போது எனக்கு வந்த தலை வெடிக்கும் அளவு அச்சத்தை ஊட்டிய அந்த இரகசியத் தகவலாகும்.
நான் மேலும் ஊடாடிப் பார்த்ததில், குமாரி எழுதிய பல கடிதங்கள், தனக்கு இன்னார் இன்னாரினால் உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது என்ற சுய வாக்கு மூலம், இன்னும் சில ஆதாரங்கள் உள்ளடங்கலான ஆவணங்களுடன் அவர்கள் களமிறங்க உள்ளனர் என்ற மேலதிக தகவலும் கிடைத்தது.
ஞான சாரவின் எதேச்சாதிகாரமும், பௌத்த சிங்கள பேரினத்தின் பெயரிலான வன்முறைகளும் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இன்றைய ஆபத்தான சூழ்நிலையில் முஸ்லிம் தலைவர் ஒருவரால் சிங்களப் பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டு எரியூட்டப்பட்டு இறந்தாள் என்கிற செய்தி ஒரு போராட்டம் மூலம் மீண்டும் கிளறப்பட்டால், இந்த நாட்டில் வாழும் அப்பாவி முஸ்லிம் மக்களை எந்த அரசியல் அதிகாரத்தாலும் பாதுகாக்க முடியாது போகும் என்பதைக் கருத்தில் எடுத்தேன்.
நானும், குமாரியின் குடும்பத்தினரை நன்கு தெரிந்தவரும், எனது நீண்ட நாள் தமிழ் நண்பருமான வின்சேந்திரராஜனும் இணைந்து களத்தில் இறங்கினோம்.
முதலில் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினோம், அவர்கள் அழுதழுது தங்களது நிலையையும், அவர்களுக்குப் பிந்திக் கிடைத்த ஆவணங்களைப்பற்றியும் குறிப்பிட்டுக் கூறினர். எங்களுக்கே உடல் நடுங்கத் தொடங்கிற்று, ஒருவாறு சமாளித்துக் கொண்டு நாட்டில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற இன்றைய ஆபத்தான நிலையை விளக்கினோம். அந்தக் குடும்பம் இனவாதிகள் அல்லர் என்பதனால் எங்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இருந்தது.
ஆயினும் உங்கள் சமூகம் எங்களது குமாரிக்கு நடந்த அநீதியைப் பற்றி ஒன்றும் பேசாது ஊமையாகத்தானே இருந்தது, ஜம்மியதுல் உலமா சபை வரை இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்ட போதும் பாதிக்கப்பட்ட எங்களுக்கு அவர்களும் நீதியைப் பெற்றுத் தரவில்லையே! என்று கூறினார்கள்.
உங்களுக்கு மதத் தலைவர்களை விட அரசியல் தலைவர்கள்தான் மேலானவர்கள் என்றும் மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களுக்குப் பயந்து செயல்படுகிறார்கள் என்றும் குமுறினர். நான் இது விடயம் தொடர்பில் உண்மையை அறிந்தவன் என்பது அவர்களுக்குத் தெரியுமாதலால் என்னையும் கடிந்து பேசினர். கூட வந்த எனது நண்பர் அவர்களோடு நிறையப் பேசி என்னை மீட்டார்.
பின்னர் ஒருவாறு எங்களது வினயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அவர்கள் மூன்று மாதர் அணியினரையும் சந்தித்துப் பேசிய பின்னர்தான் முடிவெடுக்க முடியும் என்று சொன்னார்கள். உடனே நாங்கள் அவர்களில் இருவரை எங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அமைப்பினரைச் சந்திக்கச் சென்றோம்.
முதலில் சந்திக்கச் சென்ற இலட்சக் கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுறவு அமைப்பு ஒன்றின் தலைவர் எனக்கு மிகவும் தெரிந்தவர், நான் உள்நாட்டு வணிக, கூட்டுறவுப் பிரதியமைச்சராகக் கடமையாற்றிய போது அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். இத் தலைவருடன் நீண்ட நேரம் விடயங்களை விளக்கி உரையாடினோம். இறுதியில் இவர் போராட்டத்தை கொஞ்ச நாட்கள் ஒத்திப் போடுவதாகவும், இந்தத் தீர்மானத்தை மற்றைய இரண்டு பெண்கள் அமைப்பிற்கும் தெரிவிப்பதாகவும் எங்களுக்கு வாக்குத் தந்தார். தற்காலிக மன நிம்மதி கிடைத்தது. இவ்வருடத் தலை நோன்பு கழியும் வரை என் நெஞ்சு பதை பதைத்த வண்ணமே இருந்தது.
கண்டி, கடுகண்ணாவையில் அமைந்துள்ள தந்துர எனும் முஸ்லிம் குக்கிராமத்தை ஒரு முகப் புத்தகப் பின்னூட்டலுக்காக ஆயிரக் கணக்கில் சிங்கள இளைஞர்கள் வந்து தாக்குகிற இந்தக் காலத்தில், இடர் செய்ய நாடும் எந்தப் பேரின இயக்கமும், எந்தப் பெருமத இயக்கமும் முஸ்லிம்களுக்கு ஆபத்தை விளைவிக்கவும், பயங்காட்டி மிரட்டிப் பணிய வைக்கவும் விரும்பினால் கூரே என்ற கூரிய ஆயுதத்தைத் தமது கையில் எடுக்கும் வாய்ப்பு உள்ளது என்பதையே மேற்கூறிய தலை நோன்பில் தலை போகும் வரலாற்றுப் பாடம் நமக்கு உணர்த்துகிறது.
எவ்வளவு காலம் கடந்தாலும், குமாரியின் எரிந்த உடலம் என்பது முஸ்லிம் சமூகத்தின் மார்பில் இறுகக் கட்டப்பட்டுள்ள, றிமோட் கொன்ட்ரோல் பொத்தானை அழுத்தினால் எப்பொழுதும் வெடிக்கும் தகுதியுடைய "தொலைக் கட்டுப்பாட்டு" வெடிகுண்டேயாகும் என்பதை நினைத்தவர்களாக, குமாரியின் குடும்ப உறுப்பினர்களிடம் ஆவணங்களை எவருக்கும் வழங்கமாட்டோம் என்றும் எந்த அமைப்பினரது சதித் திட்டத்திற்கும் உடந்தையாக இருக்கமாட்டோம் என்றும் உறுதிப் பிரமாணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு முஸ்லிம்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்தபின்னர் வீடு திரும்பினோம்.
யா அல்லாஹ்! நீயே தூயவன், எல்லாப் புகழும் உன்னையே சாரும், நீயே மிகப் பெரியவன். நாங்கள் எந்த அரசியல் அதிகாரத்தையோ, கட்சிகளையோ எங்களது பாதுகாப்புக்காக நம்பியிருக்கவில்லை. நீயே எமது மக்களைப் பாதுகாக்கும் கிருபையுடையோன்.

(முன்னாள் பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூதின் முகப்புத்தகத்தில் பதிவி்ட்ட பதிவு)
Previous Post Next Post