முஸ்லிங்களின் இந்த நாட்டிற்கான அர்ப்பணிப்பும் தியாகங்களும் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளன

NEWS
2 minute read


முஸ்லிங்கள் இந்த நாட்டிற்காய் செய்த அர்ப்பணிப்புக்களுக்காய் இன்று அவர்களுக்கு கிடைக்கும் பரிசு இனவாதத் தாக்குதல்களே என்பது வருத்தமளிப்பதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

இந்த நாட்டின் பொருளாதாரத் துறை மாத்திரமன்றி அரசியல் மற்றும் அவசர நிலைமைகளிலும் மனிதாபிமான ரீதியில்  செயற்பட்டு ஏனைய சமூகங்களுக்குடனான உறவையும் மனிதாபிமானத்தையும் முஸ்லிங்கள் இந்த நாட்டிற்கே வௌிக்காட்டி நின்றுள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் இன்று  முஸ்லிம் சமூகம் நாட்டிற்கு செய்த  எல்லாவற்றையும் மறந்து நாம் இந்த நாட்டிற்கு எதிரானவர்கள் போன்றதொரு தோற்றப்பாட்டை இனவாதிகள்  உருவாக்க முயல்வதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார். திருகோணமலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு முதல்வர்,

சிறுபான்மை சமூகங்கள் இந்த நாட்டிற்கு அச்சுறுத்தலானவர்கள் அல்ல என்பதை முதலில் பெரும்பான்மை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்,
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்  இரு சமூகங்களுக்குமிடையில் பல இருண்ட சரித்திரங்கள் இருந்த போதிலும் பெரும்பான்மையின் நம்பிக்கையை வென்றெடுப்படுதற்கு  சிறுபான்மை சமூகம் பல்வேறு தியாகங்களை  செய்துள்ளது,

ஆனால் எமது  தியாகத்தையும் அர்ப்பணிப்பையும்  கொச்சைப்படுத்தி தமிழ் முஸ்லிம் சமூங்கள் மீது அடக்குமுறை அரசியலை நியாயப்படுத்தும் விதமாக கடந்த கால ஆட்சியாளர்கள் இன்று இனவாதிகளை வைத்து தமது திட்டத்தை அரங்கேற்றி வருகின்றார்கள்,

இதன் மூலம் மீண்டுமொரு கலவரத்தை ஏற்படுத்தி  இந்த நாட்டைக் காப்பாற்றிய தனிநிகரற்ற வீரனாய் தன்னை காட்டிக் கொள்ள வேண்டும்  எனவுத் இதன் மூலம் தனியொருவனாய்   மீண்டும் அரசியலில் நிலைத்திருக்க முடியும் என்ற நோக்கத்திலேயே இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்,

ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் மிகத் தௌிவாக எடுத்துரைத்துள்ளோம்,நாம் பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளிலும் அறிக்கை விடுபவராக இருக்காமல் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து சமயோசிதமான முறையில் சாணக்கியமாக இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய தேவை இருக்கின்றது,

இதன் பின்னால்  வெறும் அரசியல் காரணங்கள் மாத்திரமன்றி முஸ்லிங்களின் பொருளாதாரம்,நிலையான இருப்பு போன்றவற்றை சீர்குலைக்கும் நீண்ட காலத் திட்டமும் அடங்கியுள்ளது என்பதை முஸ்லிங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், இதில் சில சர்வதேச சக்திகளின் தலையீடுகளும் இருக்கின்றன என்பதை நாம் அறியமலில்லை.

எனவே எதிர்வரும் வியாழக்கிழமை பிரதமரை நான் சந்திக்கவுள்ளேன. இதன் போது  தற்போது  நாடளாவிய ரீதியில் முஸ்லிங்களின்  சொத்துக்கள் இலக்கு வைக்கப்படுகின்றமை குறித்தும் தற்போது கிழக்கில் மெல்ல மெல்ல இனவாத செயற்பாடுகளை தலைதூக்க முயல்வதையும் மிகத்தௌிவாக நாம் பிரதமரிடம் எடுத்துரைத்து அதற்கு உரிய தீர்வொன்றை பெற்றுக் கொள்ள முயலவுள்ளோம்.

இந்த சந்தர்ப்பத்தில் சிலர் இந்த முஸ்லிங்கள் மீதான தாக்குதல்களின் ஆரம்ப கால  காரணகார்த்தாக்களான கடந்த கடந்த கால ஆட்சியாளர்களை நியாயப்படுத்தலுக்கான முயற்சிகளில் தற்போது களம் இறங்கியுள்ளார்கள்.

கடந்த கால ஆட்சியில் எமது வர்த்தகர்களின் கடைகள்,முஸ்லிங்களின் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் காணி சுவீகரிப்புக்கள்,பகிரங்கமான தூற்றுதல்கள்,அளுத்கம மற்றும் பல பகுதிகளில் முஸ்லிங்கள் மீதான தாக்குதல்கள் இவற்றையெல்லாம் இந்த நாட்டின் முஸ்லிங்கள் மறந்து விடவில்லை,

அன்று அந்த ஆட்சியாளர்கள் இவற்றை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்திருந்தால் எமது  நிலைமை  இன்று இந்தளவு பாரதூரமாக அமைந்திருக்காது என்பதை நாமறிவோம்.

இது தான் சந்தரப்பம் எனக் கருதி கடந்த ஆட்சியாளர்களை சுத்தப்படுத்தும் சுயலாப அரசியல் தொழில் செய்வதை தயவு செய்து தவிர்த்துவிடுங்கள்,
இவ்வாறான அரசியல்வாதிகளை முஸ்லிம் சமூகம் அடையாளங்கண்டு அவர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு கூறி நாம் நல்லாட்சியை தூய்மைப்படுத்த முனையவில்லை,அரசாங்கம் இனவாதிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,அதற்கான தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது என்பதை நாம் வலியுறுத்துகின்றோம்,

கடந்த கால ஆட்சியைப் போலன்றி இன்றைய ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்தி பல தீர்வுகளை பெற்றுக் கொள்ளக் கூடிய சாத்தியமும் சூழ்நிலையும் உள்ளது.

எனவே நாம் உணர்ச்சிவசப்படாமல் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும் என்பதுடன் பாதுகாப்புத் தரப்பும் நீதித்துறையும் தமது செயற்பாடுகளை பாரபட்சம் பாராது பொதுமக்களின் நலனை முன்வைத்து செயற்பட முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,
6/grid1/Political
To Top