ARA.Fareel
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மஹியங்கனை தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா முக்கியஸ்தர் கே.பி. குணவர்தன அடியாட்களை தனது விகாரைக்கு அனுப்பி தன்னை அச்சுறுத்தியதாகவும் இதன் பிறகு கவனமாக இருக்கும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் ஜாதிக பல சேனாவின் செயலாளர் வட்டரக்க விஜித தேரர் மஹியங்கனை கிராந்துருகோட்ட பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் முறைப்பாடு செய்துள்ளார்.
இவ்வாறான அச்சுறுத்தல்கள் காரணமாக தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் மஹியங்கனையில் வாழ முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கும் வட்டரக்க விஜித தேரர் இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து நிலைமையை விளக்கவுள்ளதாகவும் கூறினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மஹியங்கனை தொகுதி அமைப்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ள கே.பி. குணவர்தன மஹியங்கனை பிரதேசத்தின் பொதுபல சேனாவின் செயற்பாட்டாளரும் ஞானசார தேரரின் நெருங்கிய நண்பருமாவார். அவருக்கு மஹியங்கனை நகரில் கடந்த வியாழக்கிழமை பொது வரவேற்பளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பு நிகழ்வில் பொதுபலசேனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பௌத்த தேரர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை கே.பி குணவர்தனவின் ஆதரவாளர்கள் அவரது கெப் வண்டியில் மஹியங்கனையில் உள்ள வட்டரக்க விஜித தேரரின் மகாவலி மஹா விகாரைக்குச் சென்று அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அச் சமயம் விகாரையில் விஜித தேரரின் சீடர்களே இருந்துள்ளனர். விஜித தேரர் வெளியில் சென்றிருந்தார்.
மஹியங்கனையில் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைளின் பின்னணியில் தற்போது சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள குணவர்தனவே செயற்பட்டார் எனவும் வட்டரக்க விஜித தேரர் தெரிவிக்கிறார்.
ஜாதிக பலசேனவின் செயலாளர் வட்டரக்க விஜித தேரர் முஸ்லிம்களுடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருப்பதை எதிர்த்து பொதுபலசேனவின் செயற்பாட்டாளர்கள் அவரைத் தாக்கியமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான முறைப்பாடுகளும் பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே பதிவாகியுள்ளன.