ARA.FAREEL
மாயக்கல்லியில் விகாரை ஒன்றினை அமைப்பதற்கு தீகவாபி பரிவார சைத்திய பர்திவெல சந்தவெல தேரர் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என அம்பாறை விதியானந்த பிரிவென பிரதானி அம்பேபிட்டிய சீலரத்னதேரர் தெரிவித்தார்.
இதேவேளை, மாணிக்கமடு – மாயக்கல்லி பிரதேசத்தில் நாம் விகாரையொன்றை மாத்திரமே நிர்மாணிப்போம். பௌத்த குடும்பம் ஒன்றேனும் குடியமர்த்தப்படமாட்டார்கள் என்பதை பொறுப்புடன் கூறுகிறேன். அத்தோடு காணி உறுதிகளைக் கொண்டுள்ள முஸ்லிம்களின் காணியின் ஒரு சிறிய துண்டையேனும் அபகரிக்க மாட்டோம் என்பதை இந்த வெசாக் நன்நாளில் முஸ்லிம்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் எனவும் சீலரத்னதேரர் தெரிவித்தார்.
மாயக்கல்லியில் நிர்மாணிக்கப்பட தீர்மானிக்கப்பட்டிருக்கும் விகாரை தொடர்பாக கருத்து வெளியிடுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
இங்கு விகாரை அமைப்பதை தமிழர்கள் எதிர்க்கவில்லை. முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், முஸ்லிம் இளைஞர்களே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
பிரச்சினைகளை ஏற்படுத்தாது. விகாரை அமைப்பதற்கு எமக்கு உதவி புரியுமாறு முஸ்லிம் இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். விகாரை அமைவதால் இப்பகுதியிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படமாட்டாது. பௌத்தர்கள் கருணையுள்ளவர்கள். ஏனைய மக்களை நாம் சகோதரர்களாகவே கருதுகிறோம்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த விவகாரத்தை தமது அரசியல் சுயநலத்துக்காக பயன்படுத்தி வருகிறார்கள். இங்கு ஓர் இன முறுகலை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். முஸ்லிம் மதத்தலைவர்களும், நாமும் கலந்துரையாடி இவ்விவகாரத்துக்கு சுமுகமான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இங்கு நாம் புதிதாக பன்சலை அமைக்கவில்லை. இங்கு புராதன பன்சலையொன்று இருந்தது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் நிலவிய காலத்தில் இந்தப் பன்சலையிலிருந்த குருமார்கள் அதைக் கைவிட்டு அம்பாறைக்கு வந்தார்கள். யுத்தகாலத்தில் பன்சலை அழிவுக்குள்ளாகியுள்ளது. நாம் மீண்டும் அங்கேயே விகாரையொன்றிணை நிர்மாணிக்கப்போகிறோம்.
மாயக்கல்லியில் விகாரையொன்று அமைவதால் பௌத்தர்களை விட முஸ்லிம்களே பயன் பெறுவார்கள். இங்கு விகாரை அமைவதால் அவ்விடத்தில் வர்த்தக நிலையங்கள் உருவாகும். அந்த வர்த்தக நிலையங்களை முஸ்லிம்கள் நடத்தலாம். தீகவாபி சைத்தியவுக்குச் செல்லும் பக்தர்கள் இந்த விகாரையில் காணிக்கை செலுத்துவதற்காக வருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் முஸ்லிம்களின் கடைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்வார்கள். எனவே முஸ்லிம்கள் மதஸ்தலம் ஒன்றினை அமைப்பதற்கு உதவி செய்ய வேண்டும்.
விகாரை நிர்மாணிக்கப்பட்டதும் விகாரைக்குள்ளேயே நாம் இருப்போம். இப்பகுதியில் சிங்களவர்களை அழைத்து வந்து குடியேற்ற மாட்டோம் என்றார்.
விகாரை அமைவதற்கு தேரர் எதிர்ப்பு
மாயக்கல்லியில் விகாரை ஒன்றினை அமைப்பதற்கு தீகவாபி பரிவார சைத்திய பர்திவெல சந்தவெல தேரர் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதை நாம் கண்டிக்கிறோம்.
சிங்களக் குடும்பங்கள் ஒன்றேனும் இல்லாத இடத்தில் விகாரையொன்று நிர்மாணிக்கப்படத்தேவையில்லை என்று அவர் கூறியிருக்கிறார். இந்த கருத்தினை அவர் சுயநலம் கருதியே தெரிவித்துள்ளார்.
மாயக்கல்லியில் விகாரை அமைக்கப்பட்டால் தீகவாபி சைத்தியவுக்குச் செல்லும் பக்தர்கள் இடையில் புதிதாக அமையவுள்ள மாயக்கல்லி விகாரைக்குச் சென்று தமது காணிக்கைகளைச் செலுத்தி விட்டே தீகவாபி சைத்தியவுக்குச் செல்வார்கள். இதனால் சந்தவெல தேரருக்கு வழமையாக கிடைக்கும் காணிக்கை இல்லாமற்போகும். அவரது வருமானம் பாதிக்கப்படும். இதனாலேயே விகாரை அமைக்கப்படுவதை அவர் எதிர்க்கிறார்.
பௌத்தர்கள் வாழும் இடங்களில் மாத்திரம் தான் விகாரைகள் அமைக்கப்பட வேண்டும் என்பது தவறு. நாட்டில் பௌத்தர்கள் இல்லாத சில பகுதிகளில் விகாரைகள் உள்ளன.
துட்டகைமுனு அரசர் காலத்தில் கூட இவ்வாறு விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம் அரசியல்வாதிகள் இவரைப் பயன்படுத்தி வருகிறார்கள். இவர் முஸ்லிம் மக்களை பௌத்தர்களுக்கு எதிராக தூண்டி வருகிறார். இதனை நாம் கண்டிக்கிறோம். இவரால் இப்பகுதியில் இனமுறுகல் ஏற்படுமே ஒழிய சகவாழ்வுக்கான வாய்ப்பே இல்லாமல் போகுமென்றார்.