நபியே! நீர் கூறுவீராக. என் இறைவன் தடுத்திருப்பவையெல்லாம்
1. வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான மானக்கேடான செயல்கள்
2. பாவங்கள்;
3. நியாயமின்றி கொடுமை செய்தல்
4. எவ்வித ஆதாரமும் இன்றி நீங்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல்
5. நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது கூறுதல் என்பனவைகளேயாகும் என்று (அல்-குர்ஆன் : 7:33)
மேற்படி வசனத்தில் நமது செயற்பாடுகளில் நமக்குத் தடுக்கப்பட்டவைகள் சிறியதிலிருந்து பெரியதுவரை ஏறுவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் பார்க்குகின்றபோது நாம் மார்க்க விடயத்தில் எமக்குப் போதிய அறிவின்றி பேசுவதானது அல்லாஹ்வுக்கு இணை வைப்பதையும் விட மிகப்பெரிய குற்றமாகும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறிருந்தும் மனிதர்கள் மார்க்கத்தில் தனக்கு அறிவில்லாத விடயங்களில் தங்கள் மூக்கை நுழைக்கின்றார்கள் என்றால் நிச்சயமாக அவர்கள் ஷைத்தானை வழிப்படுகின்றார்கள் என்பதுவே நிதர்சனமான உண்மையாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் : மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில் அனுமதிக்கப் பட்டவற்றையும்,பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். நிச்சயமாக அவன் உங்களுக்கு தீமைகள் மற்றும் மானக்கேடானவைகளைச் செய்யும் படியும் அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றைக் கூறும்படியும் உங்களைத் தூண்டுகின்றான் (அல்-குர்ஆன் : 2: 168 -169)
தனக்கு அறிவில்லாத விடயங்களில் தர்க்கம் செய்வதும் தடுக்கப்பட்டதாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் : உங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள்; (அப்படியிருக்க) உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்?அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள். (அல்-குர்ஆன்3: 66)
அல்-குர்ஆன் மற்றும் அல்-ஹதீதின் அடிப்படையிலான சரியான ஆதாதரமின்றி வெறும் ஊகத்தின் அடிப்படையில் ஹராம் ஹலால் பற்றி பேசுவதும் தடுக்கப்பட்டதாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் : உங்கள் நாவுகள் பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள் - நிச்சயமாக,எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக் கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். (இத்தகைய பொய்யர்கள் அனுபவிப்பதெல்லாம்) சொற்ப இன்பம்தான்; (மறுமையிலோ) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு (அல்-குர்ஆன 16:116-117)
இன்னும் அல்லாஹ் கூறுகின்றான் : எதைப்பற்றி உமக்கு (த் தீர்க்க) ஞானமில்லையோ அதைத் தொடர வேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும். (அல்-குர்ஆன் 17:36)
இவ்வாறு மார்க்க விடயத்தில் அறிவின்றி வாதிப்பவர்கள் றுவைப்பிளாக்கள் எனப்படும் தரம் கெட்ட தாழ்ந்தவர்களேயாவார்கள் என்பதனை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
மனிதர்கள் மீது மோசடியான சில வருடங்கள் நிலவும்;அக்காலத்தில் பொய்யன் உண்மைப்படுதப்படுவான் உண்மையாளன் பொய்பிக்;கப்படுவான் மோசடிக்காரன் நம்பப்படுவான் நம்பிக்கையாளன் மோசடிக்காரனாகக் கருதப்படுவான் அக்காலத்தில் றுவைபிளாக்கள் பேசுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது றுவைபிளாக்கள் என்போர் யார்? அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே என்று கேட்க்கப்பட்டது அதற்கு நபி (ஸல்) அவர்கள் அறிவற்ற மனிதன் (இன்னுமோர் அறிவிப்பில் பாவியான மனிதன் என்றும் பிரிதோர் அறிவிப்பில் மடயன்) பொது விடயம் பற்றி பேசுவான் என்று கூறினார்கள்.
எனவே மார்க்க விடயத்தில் அறிவின்றி மூக்கை நுழைப்பவர்கள் ஷைத்தானை வழிப்படும் பாவிகளான அறிவற்ற மடயர்களான றுவைபிளாக்களேயாவார்கள் என்பதைப் பரிந்து கொண்டால் கண்டவரெல்லாம் மார்க்கம் பேச முற்படமாட்டார்கள் எனக்கருதுகின்றேன்.
இதன் பின்னரும் யாரும் தனக்குத் தெரியாத விடயத்தில் தர்க்கம் செய்யக் கண்டால் அவர்கள்தான் றுவைப்பிளாக்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
இப்படிக்கு
முனாப் நுபார்தீன் ஜே.பி