சவூதி அரேபியாவிலிருந்து ரமழானுக்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம் பழத்திற்கு அரசாங்கம் எவ்வித புதிய வரியும் அறவிடவில்லை. எதிர்வரும் புனித ரமழானுக்காக சவூதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இலவச பேரீச்சம் பழத்திற்கான அனைத்து வரிகளையும் சவூதி அரசாங்கமே செலுத்தியுள்ளது என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்தார்.
அரசாங்கம் பேரீச்சம் பழத்திற்காக இறக்குமதி வரியை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வினவிய போதே அமைச்சர் ஹலீம் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
கடந்த காலங்களில் பேரீச்சம் பழம் ஒரு கிலோவுக்கான வரி 130 ரூபாவிலிருந்து 60 ரூபாவாக எமது அரசாங்கத்தின் காலத்திலே குறைக்கப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களுக்காக மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தத்திற்கு அமைய இக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டது.
புனித ரமழானுக்காக சவூதி அரேபியா இவ்வருடம் அன்பளிப்பாக 150 தொன் பேரீச்சம் பழங்களை அனுப்பி வைத்துள்ளது. இதற்கான இறக்குமதி வரி உட்பட அனைத்து வரிகளையும் சவூதி அரசாங்கமே செலுத்தியுள்ளது. கடந்த வருடம் சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு 200 தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இவ்வருடம் 50 தொன் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு தொகை பேரீச்சம் பழங்களை சவூதியிலிருந்து அன்பளிப்பாகப் பெற்றுக்கொள்வதற்கு பேச்சுவார்த்தை நடாத்தி வருகிறோம். கடந்த காலங்களில் பேரீச்சம் பழத்துக்கான இறக்குமதி வரியை அதாவது நோன்புக்காக அனுப்பி வைக்கப்படும் பேரீச்சம் பழத்துக்கான வரி அரசாங்கம் எமக்கு திறைசேரியூடாக செலுத்தி வந்தது.
சவூதி அரேபியாவிலிந்து 150 தொன் பேரீச்சம் பழங்கள் இலங்கை வந்தடைந்துள்ளன. சவூதி அதிகாரிகளால் அது உத்தியோகபூர்வமாக எம்மிடம் கையளிக்கப்படவில்லை என்றாலும் பேரீச்சம் பழங்களை ரமழானுக்கு முன்பு விநியோகிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கொழும்பைச் சேர்ந்த 10 பள்ளிவாசல்களுக்கு பேரீச்சம் பழங்கள் ஏற்கனவே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நோன்பு ஆரம்பமாவதற்கு முன்பு அவை பகிர்ந்தளிக்கப்படும். பேரீச்சம் பழத்துக்கு அரசாங்கம் மேலதிக வரி விதித்துள்ளது என்று தவறான செய்தியே பரப்பப்பட்டு வருகிறது.
நோன்புக்கான பேரீச்சம் பழத்துக்கான வரியை சவூதி அரசாங்கம் செலுத்தியுள்ளது. எனவே மக்கள் உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.
ARA.Fareel