Headlines
Loading...
போலி ஹஜ் ஏஜென்டுகளிடம் ஏமாற வேண்டாம்: ஓமன் அரசு எச்சரிக்கை !

போலி ஹஜ் ஏஜென்டுகளிடம் ஏமாற வேண்டாம்: ஓமன் அரசு எச்சரிக்கை !



ஓமன் அரசின் நல்வாழ்வு மற்றும் மார்க்க விவகாரங்களுக்கான அமைச்சகம் (Ministry of Endowment and Religious Affairs) வெளியிட்டு முன்னெச்சரிக்கை அறிக்கையில் போலி ஹஜ் ஏஜென்டுகளிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட 61 ஹஜ் ஏஜென்டுகளின் விபரங்கள் அமைச்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆண்டில் மட்டும் சுமார் 11 போலி நிறுவனங்கள் 753 ஹஜ் யாத்ரீகர்களை ஏமாற்றி சுமார் 9 லட்சம் ஓமன் ரியால்களை (8.5 மில்லியன் திர்ஹம்) கபளீகரம் செய்து பிடிபட்டு தற்போது அபராதமும் செலுத்தி கம்பி எண்ணிக்கொண்டுள்ளனர். இப்படியாக கடந்த 3 ஆண்டுகளில் பல போலி ஹஜ் ஏஜென்டுகள் முளைத்ததால் அரசு இவ்வாறான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

புனித ஹரம் ஷரீஃபில் விரிவாக்க கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த காரணத்தாலும் உள்நாட்டு யாத்ரீகர்களின் 50 சதவிகிதமும் வெளிநாட்டு யாத்ரீகர்களில் 20 சதவிகிதமும் சவுதி அரசால் ஹஜ் கோட்டாவில் குறைக்கப்பட்டிருந்தன. தற்போது குறைக்கப்பட்ட கோட்டா எண்ணிக்கை மீண்டும் உயர்த்தப்பட்டதால் ஓமனுக்கான அனுமதி 11,200ல் இருந்து 14,000 ஆக அதிகரித்துள்ளது.

14,000 எனும் புதிய கோட்டா அனுமதி மூலம் 12,664 ஓமனியர்களும், 600 வெளிநாட்டு பிரஜைகளும், எஞ்சிய இடங்களில் ஓமன் ராணுவம் மற்றும் ஓமன் ராஜதந்திரிகளும் (Oman Military Personal & Diplomats) ஹஜ் புனித யாத்திரையை மேற்கொள்ளலாம்.

Source: Gulf News