(ஏ.எல்.எம்.சத்தார்)
வடக்கு கிழக்கு பகுதியில் அமையப்பெற்றிருக்கும் புராதன பெளத்த சின்னங்களை முஸ்லிம்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை.ஆனால் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் புதிதாக விகாரைகள் அமைக்கப்படுவதையும் சிலை வைப்பதையுமே எதிர்க்கிறோம் என பேருவளை தெகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான இப்திகார் ஜெமீல் தெரிவித்தார்.
அத்துடன், புத்தசாசன அமைச்சர் பொறுப்பிலுள்ள விஜேதாஸ ராஜபக் ஷவும், இனவாத செயற்பாடுகளுக்காக வடக்கு, கிழக்கிலுள்ள பௌத்த சின்னங்களை அழிக்க முடியாது என்று புதுப்புரளியொன்றைக் கிளப்பியிருக்கிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இனவாதிகளாலும் இனவாதத்திற்குத் துணைபோகும் ஒருசில அரசியல்வாதிகளால் ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் அண்மைக்காலங்களில் வெளிவரும் அறிக்கைகள், கருத்துகள் குறித்து மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் ராவணா பலய போன்ற இனவாத அமைப்புகளும் இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தினர் குறித்து வெளியிட்டுவரும் இனத்துவேசக் கருத்துகள் நாட்டுக்கு ஆரோக்கியமானதாக அமையாது. இத்தகைய கருத்துகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்கு நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் துணைபோகாது என்றே நம்புகிறோம்.
வில்பத்து விடயம், மாயக்கல்லிமலை விவகாரம் என்று அண்மைக்காலத்தில் சிறுபான்மை மக்களுக்கெதிராக புதுப்புதுப் பிரச்சினைகளைத் தோற்றுவித்து வரும் பௌத்த இனவாதிகள் தொடர்ந்தும் நாட்டில் அமைதியின்மையை உருவாக்கும் விதத்தில் செயற்பட்டுக் கொண்டே வருகிறார்கள். இப்போது ஞானசார தேரர் மியன்மாரிலிருந்து இங்கு அகதிகளாக வந்தவர்கள் விடயத்தையும் இனவாதத்தைத் தூண்டும் விதமாகக் கையாண்டு வருகிறார்.
புத்தசாசன அமைச்சர் பொறுப்பிலுள்ள விஜேதாஸ ராஜபக் ஷவும், இனவாத செயற்பாடுகளுக்காக வடக்கு, கிழக்கிலுள்ள பௌத்த சின்னங்களை அழிக்க முடியாது என்று புதுப்புரளியொன்றைக் கிளப்பியிருக்கிறார். அங்குள்ள பௌத்த சின்னங்களுக்கோ பௌத்த அடையாளங்களுக்கோ முஸ்லிம்கள் ஒருபோதும் எதிர்ப்பு வெளிக்காட்டுவதில்லை.
ஆனால் பௌத்தர்கள் இல்லாத இடங்களிலும் ஏற்கனவே அவர்களது விகாரைகள் இல்லாத முஸ்லிம் பிரதேசங்களிலும் புதிதாக உருவாக்குவதற்கே முஸ்லிம்கள் எதிர்ப்புக்காட்டுகிறார்கள். எனவே இந்த அமைச்சினதோ அல்லது ஊடகங்களில் மற்றும் இனவாதிகளால் வெளியிடும் கருத்துகள் அரசின் கருத்துகளாக அமையாது.
மேற்படி அமைச்சர், அமைச்சரவையில் பிரேரணைகள் கொண்டு வந்தே அவர் குறிப்பிடும் விடயங்கள் நிறைவேற்றிக் கொள்வதைத் தவிர ஊடகங்களில் அறிக்கை வெளியிடுவது சாத்தியமானதொன்றல்ல.இந்நாட்டில் முஸ்லிம்கள் சாந்தி, சமாதானத்துடனே வாழ விரும்புகிறார்கள். பல நூற்றாண்டு காலமாக இந்நாட்டின் சகல நலன்களுக்கும் உறுதுணை புரிபவர்களாகவே வாழ்ந்த வரலாறுண்டு.
பௌத்த மக்களோடு மிகவும் அன்னியோன்யமாக வாழ்ந்து வரும் நிலையில் இனவாதிகளே குழப்பத்துக்கு தூபமிட்டு வருகிறார்கள். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. அத்தகைய செயற்பாடுகளுக்கு அஞ்சப்போவதில்லை. அமைதி, நிம்மதியை விரும்பியே முஸ்லிம்கள் இந்த நல்லாட்சியை அமைப்பதில் கூடிய அக்கறை செலுத்தினார்கள். இந்த அரசும் இனவாதிகளின் செயற்பாடுகளை அங்கீகரிக்குமானால் அதனையும் எதிர்த்து நிற்க நாம் பின்வாங்கப் போவதில்லை என்றார்.