Top News

பைசால் காசிமின் உரைக்கு கண்டனம்.




சாய்ந்தமருது வைத்தியசாலையினை கல்முனை அஸ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைக்கும் பிரதி அமைச்சர் பைசல் காசிமுடைய முடிவினை வன்மையாக கண்டிக்கின்றோம் என  நாபீர் பெளண்டேசன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் பொறியியலாளர் யூ.கே.நாபீர் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி மற்றும் வளங்களின் அபிவிருத்திக்காக பாடுபடும் அரசியல் தலைவர்கள் தொடர்பில் உள்ள கருத்து தொடர்பாக வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடும்போது,

அண்மையில் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் சிறு நீரக நோயாளர்களுக்கான குருதி மாற்றும் சிகிச்சை பிரிவினை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையினை கல்முனை அஸ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைத்து அவசர விபத்து பிரிவுடன் முறிவு வைத்திய விஷேட பிரிவும் ஸ்தாபிக்கப்படும் என ஊடகங்களுக்கு முன் உரையாற்றிமையினை ஏற்றுக்கொள்ளவோ அதற்கு ஆதரவளிக்கவோ முடியாது என்பதோடு அதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

கல்முனையில் இருக்கும் வைத்தியாசாலையாக இருந்தாலும் சரி சாய்ந்தமருது வைத்தியசாலையாக இருந்தாலும் சரி அவைகளை அபிவிருத்தி செய்யும் கடமையானது முஸ்லிம் காங்கிரசினதும் அப்பிரதேசத்தில் பிறந்த மகன் என்ற ரீதியில் பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசிமினுடைய கடமையுமாகும். அதே நேரம் சாய்ந்தமருதின் வளமாக இருக்க கூடிய வைத்தியசாலையினை மூடி விட்டு அதனை கல்முனையில் இருக்ககூடிய அஸ்ரஃப் ஞாபகர்த்த வைத்தியசாலையின் ஒரு விபத்து பிரிவாக மாற்ற எத்தனிப்பதனை ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாத கேளிக்கூத்தான விடயமாகும்.

அவ்வாறு விபத்துடனான முறிவு பிரிவொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றால்முஸ்லிம் காங்கிரசினுடைய பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதி அமைச்சராகவும் இருக்க கூடிய பைசல் காசிம் உடனடியாக அஸ்ரஃப் வைத்தியசாலைக்கு பின்புறமாக உள்ள இடத்தினை மீட்டு விபத்துடனான முறிவுப்பிரிவினை உருவாக்க முடியாதாஎன்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளமை நியாயமான கேள்வியாகும். ஒரு பிரதேசத்தில் இருக்கின்ற வளத்தினை அழித்து விட்டு வேறொரு பிரதேசத்தில் உள்ள இன்னுமொரு வைத்தியசாலையுடன் இணைக்கும் விடயமானது எதிர்காலத்தில் மேலும் பிரதேசவாதத்தினை உருவாக்க முயலும் விடயமாக உள்ளது. அது மட்டுமல்லாமல் இவ்வாறான விடயங்களை ஏற்படுத்துவதன் மூலம் சிறீலங்கா முஸ்லிம் கங்கிரஸ் கல்முனை தொகுதியில் தங்களுக்கு சாதகமான அரசியல் கலாச்சாரத்தினை நாசுக்கான முறையில் மேற்கொள்ள எத்தனிப்பதனை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.

கல்முனையில் உள்ள அஸ்ரஃப் ஞாபகர்த்த வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் அல்லது இன்னும் நவீன வசதிகளை கொண்ட மேலும் பல பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் நாபீர் பெளண்டேசனிடம் மாற்றுக்கருத்தில்லை. அதே போலவே நாபீர் பெளண்டேசனுக்கு அரசியல் அதிகாரம் மக்களினால் வழங்கப்படுமாயின் குறித்த விபத்து பிரிவினை அஸ்ரஃப் ஞாபகர்த்த வைத்திய சாலையில் அமைப்பதற்கான இடத்தினை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் மிகவும் பொறுப்புடன் நடந்து அதனை சாதித்தும் காட்டும் என்பதனை இங்கு கூறிக்கொள்வதோடு ஒரு பிரதேசத்தில் இருக்கும் வளத்தினை அழித்தொழிக்கும் விடயத்தினையே நாபீர் பெளண்டேசன் எதிர்க்கின்றது என்பதனை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றது.

சாய்ந்தமருது ஷூரா சபையின் நிறைவேற்று குழுக் கூட்டம்  கடந்த (10.05.2017)புதன்கிழமை அதன் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் தலைமையில்நடைபெற்றபோது இது தொடர்பாக பல கோணங்களில் விரிவாக ஆராயப்பட்டபொழுது  1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சர்ச்சைக்குள்ளாகி உள்ள குறித்த சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை காலத்திற்கு காலம் பரிணாம வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றது. அத்தோடு முழு கல்முனைப் பிராந்தியத்திற்கும் நிறைவான சுகாதார சேவைகளை வழங்கியும் வந்துள்ளது. எனினும் கடந்த 2000ஆம் ஆண்டுக்குப் பின்னரே அது பின்னடைவுக்கு தள்ளப்பட்டிருக்கிறது என குறித்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கு மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரபின் ஈடு செய்ய முடியாத மரணமும் ஒரு காரணமாகும்.

ஆகவே அதனை தரமுயர்த்தி பிரதேச மக்களுக்கு முன்னர் போன்று சேவையாற்றுவதற்கு ஏற்ற வகையில் அதன் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். விசேட வைத்திய நிபுணர்கள் கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளையே பிரதி சுகாதார அமைச்சரும் அவர் சார்ந்த சீறி லங்கா முஸ்லிம் காங்கிரசும் எடுக்க வேண்டும் என்பதே நாபீர் பெளண்டேசனுடைய கருத்தாக இருக்கின்றது.

அவ்வாறில்லாமல் சாய்ந்தமருதில் இருக்கும் வைத்தியசாலையினதும்ஊரினதும் அடையாளத்தை முற்றாக இல்லாதொழித்து விட்டு வேறொரு வைத்தியசாலையின் கீழ் ஒரு பிரிவை மாத்திரம் கொண்டியங்குவதற்கு ஒருபோதும் நாபீர் பெளண்டேசன் பச்சைகொடி காட்ட போவதில்லை. சாய்ந்தமருது வைத்தியசாலை நிரந்தரமாக இருக்கத்தக்கதாகவே எந்தவொரு விசேட பிரிவாக இருந்தாலும்வேறு ஏதாவது அபிவிருத்திகளாக இருந்தாலும்ஏற்படுத்தப்பட வேண்டும் இல்லாமல் பிரதி அமைச்சர் பைசல் காசிமினுடைய முடிவிற்கு ஏற்ப சாய்ந்தமருதின் வளம் பிரிதொரு பிரதேசத்துடன் இணைக்கப்படுமாயின் நாபீர் பெளண்டேசன் வீதிக்கு இறங்கி போராடவும் தயாராக உள்ளது என்பதனை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

நூற்றாண்டு காலமாக சாய்ந்தமருத்துக்கு இருந்து வந்த உள்ளூராட்சி சபையை பறிகொடுத்து விட்டுதற்போது அப்படியொரு சபையை பெற்றுக்கொள்வதற்காக போராடுகின்ற இந்த நிலையிலே கல்முனை தொகுதியில் இருந்த இலங்கை வேலை வாய்ப்பு பணியகம் அம்பாறைக்கு மாற்றப்பட்டு வளங்கள் தொடர் தேர்ச்சியாக சூரையாடப்படுவதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அதனை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் சாய்ந்தமருதில் இருக்கும் பிரதேச செயலகத்தினை கூட அழித்து விடுவார்கள் என்பதனை நாபீர் பெளண்டேசன் சந்தேக கண்கொண்டே பார்க்க வேண்டியுள்ளது.

ஆகவே மீண்டும் ஒரு முறை இவ்வாறு பிரதி அமைச்சர் பைசல் காசிமுடைய கருத்திலே தெளிவாகின்ற விடயமான  பிரதேசத்தில் இருக்கும் வளங்களை அழிக்கின்ற செயற்பாடுகளுக்கும் அவருடைய கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் தான்தோன்றித்தனமாக சாய்ந்தமருதினை மாற்றான் கண்டு கொண்டு பார்க்கின்ற தொடர் தேர்ச்சியான நிலைமையினையும் நாபீர் பெளண்டேசன் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

(எஸ்.அஷ்ரப்கான், ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்)

Previous Post Next Post