நஜீப் பின் கபூர்
இறுதி தீர்மானம் எடுக்கின்றபோது துணைக்கு நின்றவர்கள்!
சப்பாத்து பெரிதாக இருப்பினும் அமைச்சர் மங்கள நல்லவர்!
நீதி மன்றில் காணாமல் போன ஷசி வீரவன்ச பொக்கிசம்!
உலகையே ஆச்சரியப்படுத்துகின்ற நமது நீதி மன்றங்கள்!
நல்லாட்சிக்குள் சுட்ட மண்ணாகப் பலபேர் நிற்கின்றார்கள்!
அமைச்சரவை மாற்றங்கள் தொடர்பான இந்தக் கட்டுரையை எழுதும் நோக்கில் கதிரையில் அமர்கின்ற நேரமே ஒரு அசிங்கமான செய்தியைத் தொலைக் காட்சியூடாகக் கேட்க பார்க்க முடிந்தது. நமது நாட்டைப் பொறுத்தவரை இவை எல்லாம் சராசரி விடயங்கள் என்றுதான் இன்று நடந்து கொண்டிருக்கின்றன.
மைத்திரி - ரணில் நல்லாட்சி, முன்னைய ஆட்சிக் காலத்தில் மக்கள் சொத்துக்களைக் கொள்ளையடித்தவர்களை பிடித்து வந்து, அவர்கள் வைத்திருக்கின்ற பணத்தை மீட்டு மக்களுக்குக் கொடுப்போம். ஊடகவியலாளர்களைக் கொலை செய்தவர்களைக் கூண்டோடு தூக்கில் போடுவோம். ரகர் வீரர் தாஜூதீன் படுகொலையின் இரகசியங்களை எல்லாம் கண்டு பிடிப்போம். சிறுபான்மை மக்களுக்கு உரிமைகளை அள்ளிக் கொட்டப் போகின்றோம் என்று மேடைகளில் நல்லாட்சிக்காரர்கள் கூற நாங்களும் எழுதி எழுதிப்போதும் என்றிருக்கின்ற இந்த நேரத்தில்தான் அந்த செய்தி காதில் கேட்டது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மனைவி ஷசி வீரவன்ச நீதி மன்றில் ஒப்படைத்த மோசடியான கடவுச்சீட்டும், போலி அடையாள அட்டையும் நீதி மன்றக் காப்பறையிலிருந்து காணாமல்போய் விட்டது என்று அதற்குப் பொறுப்பானவர் கடந்த வியாழக்கிழமை 25.05.2017ல் புதுக்கடை நீதி மன்றத்தில் கூறி இருக்கின்றார்.
இதற்கு முன்னர் தாஜூதீனுடைய அவயவங்கள் பரிசோதிக்கப்பட்ட பின் அதுவும் பாதுகாப்பாக வைக்கப்பட்ட இடத்தில் காணாமல் போயிருக்கின்றது. அதே போன்று லங்கா ஈ நியூஸ் செய்தியாளர் எகனலிகொட பற்றிய பல பதிவுகள் புத்தகங்களில் இருந்து காணாமல்போய் இருந்தது என்று முன்பு சில தகவல்கள் வெளிவந்தது ஞாபகம்.
லசந்த விக்கிரமதுங்ஹ படுகொலையின் போது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று முதலில் கூறிவிட்டு இல்லை கூரிய ஆயுதங்களினால்தான் குத்திக் கொன்றிருக்கின்றார்கள் என்று புதிய விசாரணைகளில் இருந்து தெரிய வந்திருக்கின்றது என்று பத்திரிகைகளில் செய்திகள் சொல்லப்பட்டிருந்தன.
நமது நாட்டில் நீதி மன்றத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுகின்ற வழக்குத் தொடர்பான பொருட்கள் -தடயங்கள் காணாமல் போவது எங்களுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்குக் கூட, நமது நாட்டின் நீதி மற்றும் சட்டம் எப்படி செயலாற்றிக் கொண்டிருக்கின்றன என்பதற்கு இவை எல்லாம் நல்ல உதாரணங்கள்.
கடந்த காலத்தில் கொள்ளையடித்தவர்களை எல்லாம் தேடிப்பிடிப்போம் என்பது மட்டுமல்ல நல்லாட்சியில் கூட கள்வர்களாய் இருக்கின்றார்கள் என்று ஜனாதிபதியே பகிரங்கமாக ஒரு சந்தர்ப்பத்தில் எச்சரித்திருந்தார் . எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற போது இந்த நல்லாட்சியிலும் ஏதும் பெரிதாக மாற்றங்கள் நடப்பதற்கோ குற்றவாளிகளுக்குத் தண்டனை என்பதற்கோ வாய்ப்பே கிடையாது என்பதைத் தான் இந்த செய்திகள் எல்லாம் எமக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
பௌத்த போதகர் ஞானத்தார்கூட சில தினங்களுக்கு முன்னர் நான் இந்த நாட்டு சட்டங்களையோ நீதி மன்றங்களையே ஒரு போதும் மதிக்க மாட்டேன் என்று ஊடகங்கள் முன் அடித்துக் கூறி விட்டார். அரச நிறுவனங்களுக்குள் அத்து மீறுவதும், வழிபாட்டு நிலையங்களுக்குத் தீ மூட்டுவதும் சிறுபான்மை வர்த்தக நிலையங்களை பெற்றோல் ஊற்றிக் கொழுத்துவது என்பதும் அவர் கூற்றுப்படி இந்த நாட்டுச் சட்டத்தில் அடங்காத குற்றங்கள் -விடயங்கள் போலும்!
எனவேதான் சட்டத்துக்குப் பணியத் தயாரில்லாத மனிதன் கொழுத்திக் கொண்டிருக்கின்றார் சட்டத்தை காக்க வேண்டிய தரப்பு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. இந்த விவகாரம் அப்படி இருக்க அமைச்சரவை மாற்றம் தொடர்பாக என்ன நடந்திருக்கின்றது இதன் பின்னர் என்ன நடக்கப்போகின்றது என்று பார்ப்போம்.
அமைச்சரவையில் சிறிய ஒரு மாற்றத்தைத்தான் ஜனாதிபதி சில தினங்களுக்கு முன்னர் செய்திருக்கின்றார் என்று பார்த்தால் அது அப்படி இல்லை. நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்கவை அந்தப் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரி தூக்க முனைந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரதமர் ரணில் அதற்கு சுற்றிவளைத்துப் பல முட்டுக்கட்டைகளைப்போட்டுக் கொண்டிருந்தார். அரசாங்கத்திலிருந்து பலர் வெளியே போய் விடுவார்கள் அரசு கவிழ்ந்து விடும் என்று ஜனாதிபதியைப் பிரதமர் அச்சமூட்டிக் கொண்டிருந்தார்.
கடைசியில் இந்த விவகாரத்தில் நான் முடிவெடுக்கின்றேன் நீங்கள் சற்றுத் தள்ளி நில்லுங்கள் வருகின்ற விளைவுகளை நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று மைத்திரி பிரதமரிடத்தில் கூறியது அவருக்குத் தர்ம சங்கடமாகப்போய் விட்டது. எனவே புதிய மத்திய வங்கி ஆளுநர் விவகாரத்தில் எடுத்த முடிவு போன்றுதான் ரவி விடயத்தில் ஜனாதிபதி மைத்திரி உறுதியாக நின்றார்.
இந்த நிலையில் ஜனாதிபதிக்கு எதிராக சில கைக்கூலிகளை வைத்து மைத்திரிக்கு எதிராக போர்க் கொடிபிடிக்க முனைந்த முன்னாள் காசுக்குப் பொறுப்பானவர் பற்றிக் கடந்த வாரம் சொல்லி இருந்தோம். அவர் கடல் கடந்த பதவியால் தூக்கி வீசப்பட்டிருக்கின்றார் என்பது இன்று நிலை.
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்க கடந்த வாரம் ஞாயிறு வெளியாள ஆங்கில சிங்கள பத்திரிகைகளுக்கு தனது பதவியைப் பாதுகாத்துக் கொள்ளும் விதமாக தன்னைத்தானே புகழ்பாடி முழுப்பக்க விளம்பரங்களைக் கொடுத்திருந்தார். என்றாலும் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.
இந்த முன்னாள் நிதி அமைச்சர் சந்திரிக்க பண்டாரநாயக்க ஜனாதிபதியாகவும் ரணில் பிரதமராகவும் இருந்த காலத்தில் அவர் வர்த்தக அமைச்சராக வேலை பார்த்த காலத்தில் சதோசவில் நடந்த மோசடி, தற்போது தீர்வையற்ற வாகன இறக்குமதி, தனது பதவியைக் காத்துக் கொள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கொடுப்பனவுகள் கொடுத்து வந்தார் என்று இந்த குற்றச்சாட்டுக்கள் உயர்ந்து கொண்டே போகின்றது.
என்னதான் நடந்தாலும் என்ன? நாம் முன்பு சொன்னது போல் நீதி மன்றத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுகின்ற வழக்குத் தொடர்பான பொருட்கள்-ஆவணங்களே காணாமல்போகின்ற இந்த நாட்டில் இது எல்லாம் எங்கே கையும் மெய்யுமாக அகப்படவா போகின்றது.?
மல்வானையில் ஆளில்லாமல் மாளிகைகள் கட்டப்பட்டிருக்கின்றது. சொந்தக்காரர் யார் என்று தேடிப் பார்த்தால் அப்படி எல்லாம் ஆள்கிடையாது என்று தகவல்கள் வெளிவருகின்றது. இப்படியான நிகழ்வுகள் உலகில் வேறு ஏதாவது நாடுகளில் நடக்க முடியுமா என்று கேட்கத் தோன்றுகின்றது.
இந்த அமைச்சு மாற்றங்களுடன் பொதுவாக புதிய நிதி அமைச்சர் மங்கள விவகாரத்தில் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருனநாயக்காவை விட அனைவரும் நல்ல திருப்தியில் இருக்கின்றார்கள் என்று அவர்களின் பேச்சுக்களில் தெரிகின்றது.
ரவிக்குக் கொடுத்திருக்கின்ற புதிய பதவி பற்றி ஜேவிபி. தலைவர் அணுரகுமார திசாநாயக்க கருவாட்டுச் சட்டியை களவாகத் தின்று கொண்டிருந்தவனுக்கு மாசித்துண்டால் ஜனாதிபதி வீசி அடித்திருக்கின்றார் என்று நையாண்டியாகவும் அர்த்தத்துடனும் அவர் பேசி இருக்கின்றார். இக்கட்டுரையாளனின் அவதானப்படி மங்கள சமரவீர இந்த வெளிவிவகார அமைச்சுப் பதவியை கௌரவமாகவும் நல்ல முறையிலும்தான் முன்னெடுத்துக் கொண்டிருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் சீரழிந்து போயிருந்த வெளிவிவகார விடயத்தை மிகவும் வெற்றிகரமாக மீட்டெடுத்து நாட்டுக்கு நல்லபெயரை ஈட்டிக் கொடுத்தார்.
பாராளுமன்றத்தில் மங்களவுக்கு இந்த நிதி அமைச்சு பதவி-சப்பாத்துப் பெரிதோ என்று அவர் அச்சப்பட்டாலும் அவர் ஒரு கள்வன் அல்ல. எனவே அவருக்கு நிச்சயமாக இந்தப் பதவியை நல்ல முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று எதிரணியைச் சேர்ந்த சகாக்கள் கூட வாழ்த்துக் கூறியதை நாம் பார்க்க முடிந்தது. ஆனால் இந்த புதிய வெளிவிவகார அமைச்சர் ரவி விடயத்தில் நிறையவே சந்தேகப் பார்வை இருந்து வருகின்றது.
நாட்டிலுள்ள அனேகமான ஊடகங்களைக் கூட முன்னாள் நிதி அமைச்சர் தனக்கு வேண்டிய விதத்தில் செய்திகளை வெளியிட அங்கெல்லாம் தமக்கு வேண்டிய ஆட்களைப் பாவித்துக் கொண்டிருந்தார். அல்லது அவர்களை விலைக்கு வாங்கி இருந்தார் என்று கூடக் கூற முடியும். எது பண்ணியும் அவருக்கு தனது பதவியைப் பிரதமரைக் கொண்டு கூட பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. எனவே தீர்மானங்களை எடுக்கின்ற இடத்தில் ஜனாதிபதி எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார் என்று தெரிகின்றது. ஆனால் அவரைப் பதவிக்குக் கொண்டு வந்தவர்கள் எதிர்பார்க்கின்ற வேகத்தில் அது அமையவில்லை.
இதற்கிடையில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருனநாயக்காவை பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் கூட்டு எதிர்க் கட்சிக்காரர்கள் போட்டுக் கிழித்துக் கொண்டிருக்கின்ற அதே நேரம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரவியின் பதவி பறிக்கப்படுவது பற்றித் தொலைபேசியில் விசாரித்துத் தனது ஒருமைப்பாட்டை அவருக்குத் தெரியப்படுத்தி இருக்கின்றார். அரசியல் சந்தர்ப்பவாதம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
இதற்கிடையில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருனநாயக்க ஆசியாவிலேயே சிறந்த நிதி அமைச்சராக கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் தெரிவாகி இருந்தார். இப்படிப்பட்ட ஒருவரையே அந்தப் பதயிலிருந்து நமது ஜனாதிபதி மைத்திரி தூக்கி எறிந்திருக்கின்றார் என்றால் ஏதோ தவறு நடந்துதான் இருக்கின்றது. பினை முறிதுவக்க காலத்தில் முன்னாள் நிதியமைச்சர் நிலைப்பாடு தெரிந்த விவகாரம்தான். கட்டுரையாளனைப் பொறுத்தவரை இப்படி ஒரு சந்தேகம் இருக்கின்றது.
ஒரு நாட்டில் 10 - 15 வருடங்கள் நிதி அமைச்சர் பதவி வகித்து, அந்த நாட்டின் நிதித்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தில் மேன்மையை ஏற்படுத்திய ஒருவருக்கு இந்தக் கௌரவம் வழங்கப்பட்டிருந்தால் ஏற்றுக் கொள்ள முடியும். அவர் பதவி ஏற்ற இரு வருடத்திற்குள்ளேயே அவருக்கு இந்த உயர் கௌரவம்.? இதற்கிடையில் முதலாவது முறையாகவும் இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதி தலையிட்டல்லவா ரவி தயாரித்த வரவு செலவுத்திட்டங்களினால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளித்தார்.
நிதி அமைச்சர் ரவிக்கு இந்த கௌரவம் கிடைக்கின்ற நேரத்திலேயே இந்த நாட்டு நிதி நிலமை மிகவும் மோசமாக இருந்து வருகின்றது என்று மத்திய வங்கி அதிகாரிகள் பகிரங்கமாகப் பேசி இருந்தார்கள். இந்தப் பின்னணியில்தான் எமக்கு ஒரு சந்தேகம்! நமது நாட்டில் பணத்துக்காக கௌரவப் பட்டங்களை விற்பணை செய்கின்ற சில நிறுவனங்கள் இருக்கின்றன.
அவ்வாறான நிறுவனங்களுக்கு நமது நாட்டில் சில பேர் பணம் கொடுத்து அந்த நிறுவனங்களிடமிருந்து கௌரவ பட்டங்களை வாங்கிக் கொள்கின்ற ஒரு நடை முறை இருந்து வருகின்றது.! அங்கு நடக்கின்ற விழாவுக்கும், ஆடை அணிகளுக்கும் சேர்த்தே பணத்தை வாங்கி கொண்டு பெரும் விழாக்களை நடாத்தி கௌரவ கலாநிதி (டாக்டர்) பட்டம் கொடுப்பதை நாம் பார்த்திருக்கின்றோம்- கேள்விப்பட்டிருக்கின்றோம்.! இவர்களில் பெரும்பாலனவர்கள் அரசியல்வாதிகள் என்பதுதான் இதிலுள்ள கேவலம்.!
நிதி அமைச்சருக்கு குறிப்பிட்ட சஞ்சிசை நிறுவனம் அவசரப்பட்டு இந்த கௌரவத்தை வழங்கி அவரைத் தொடர்ந்து இந்த நாட்டில் நிதி அமைச்சர் பதவியில் வைத்துக் கொள்ள எடுத்த ஒரு பெரிய முயற்சியாகக் கூட இந்த ஆசியாவில் சிறந்த நிதி அமைச்சர் என்ற பதவி அமைந்திருந்தாலும் இந்த நாட்டில் நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கின்ற போது ஆச்சரியப்படுவதற்கில்லை. மறுபுறத்தில் இதன் பின்னணியில் ஏதேனும் வர்த்தகம் சம்பந்தப்பட்டிருந்ததோ தெரியாது?
அடுத்து அர்ஜூன ரனதுங்ஹவிடமிருந்த துறைமுகங்கள் மாற்றப்பட்டிருக்கின்ற விடயத்தை எடுத்துக் கொண்டால் அவர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் துறைமுகங்கள் விவகாரத்தில் கடந்த காலங்களில் கடுமையாக மோதிக் கொண்டிருந்தார். இது நல்லாட்சிக்குள் சில நெருக்கடிகளைத் தோற்றுவித்தது எனவேதான் மென்மையான மஹிந்த சமரசிங்;ஹவுக்கு இந்த செல்வாக்கான துறைமுக அமைச்சுப்போய் சேர்ந்திருக்கின்றது என்று எடுத்துக் கொள்ள முடியும்.
எமக்குக் கிடைக்கின்ற தகவல்படி இந்த அமைச்சரவை மாற்றம் ஒரு முடிவல்ல ஒரு ஆரம்பமாகவே தெரிகின்றது. இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சுக்கள் பல இன்றும் மாற்றப்பட இருக்கின்றது. ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டில் இருக்கின்ற ஒரு நேரத்தில் அதுவும் விரைவில் நடக்க இருக்கின்றது. இதற்கு மேலாக தமக்கு வேண்டியவர்களைச் செயலாளர்களாக வைத்துக் கொள்ளும் ஏற்பாடுகளுக்கும் ஜனாதிபதி மைத்திரி ஆப்பு வைக்க இருக்கின்றார் என்று தெரிகின்றது.
இந்த அமைச்சரவை மாற்றங்களின் போது பிரதமர் பிரதமர் ரணில் மற்றும் சந்திரிக்காவுடன் பேசி சில தீர்மானங்களை மேற் கொள்வதற்கு முன்னர், மூன்று முக்கியஸ்தர்களுடன்தான் ஜனாதிபதி மைத்திரி இறுதித் தீர்மானங்களுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் கட்ட அமைச்சரவை மாற்றங்களும் முற்றுப் பெற்றதன் பின்னர் அவர்கள் பற்றிய தகவல்களையும் அங்கு என்ன பேசப்பட்டது போன்ற தகவல்களையும் நமது வாசகர்களுக்குச் சொல்ல இருக்கின்றோம். இதற்கிடையில் கடந்த மஹிந்த காலத்துக் குற்றச் செயல்களுக்கு மென்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அடம்பிடிக்கின்ற ஒரு அமைச்சர் பதவி கடைசி நேரத்தில் தப்பிப் பிழைத்த ஒரு கதையும் இருக்கின்றது.
அமைச்சரவை மாற்றத்துக்கு இரு நாள் கடந்த பின்னர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந் சைடம் விவகாரத்தில் அமைச்சரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் பின்னர் மாற்றப்படுவது நல்லாட்சிக்கு ஆரோக்கியமான ஒரு நடவடிக்கை அல்ல என்று வெளியிட்ட ஒரு கருத்து இன்னும் நல்லாட்சிக்குள் பல பேர் சுட்ட மண்ணாகத்தான் ஒட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையே காட்டுகின்றது.