(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
இயற்கை அனர்த்தங்களையடுத்து மூடப்பட்ட பாடசாலைகள் திறப்பது பற்றி வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று (31) புதன்கிழமை கல்வி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அதில் தொடர்ந்தும் அவர் குறிப்பிடும் போது,
இந்த அனர்த்தங்களில் மாணவ சமூகத்தைச் சேர்ந்த 44பேர் பலியானதுடன் 8பேர் காணாமல் போயுள்ளனர். மழை, வெள்ளம், மண்சரிவு முதலான அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மூன்று சீருடைத்துணிகள் இலவசமாக வழங்கப்படுவதோடு, பாடப்புத்தகங் கள், அப்பியாசக் கொப்பிகள், பாதணிகள் போன்றவையும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட பிரதேச பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் வர்ண உடை அணிந்து பாடசாலை செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், பரீட்சைச் சான்றிதழ்கள் சேதமடைந்திருப்பின் அவற்றை மீள வழங்கும் வேலைத்திட்டம் அமுலாவதாகவும் தெரிவித்தார்.
கூட்டுறவு கடன் வழங்கும் நிறுவனங்களில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுககு முன்னுரிமை வழங்குமாறும் கல்வி அமைச்சர் இதன்போது கேட்டுக்கொண்டார்.