(எஸ்.அஷ்ரப்கான்)
மூதூரில் தமிழ் பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டமையை முஸ்லிம் உலமா கட்சி வன்மையாக கண்டித்திருப்பதுடன் இதன் பின்னணியில் இனவாத சக்திகள் உள்ளனவா என்பதை அரசு கண்டறிய வேண்டும் எனவும் கோரியுள்ளது.
இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,
தமிழ் முஸ்லிம் உறவு சிறந்த முறையில் இருக்கும் அமைதியான கிழக்கு மாகாணத்தில் இத்தகைய மோசமான செயலை யார் செய்திருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும். அதே வேளை இதனை செய்தவர்கள் முஸ்லிம் இளைஞர்களா அல்லது இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தமுயற்சிக்கும் பேரினவாதிகளினால் முஸ்லிம் என ஆக்கப்பட்டோரா அல்லது விலை கொடுத்து வாங்கப்பட்டோரா என்பதும் வெளிப்படுத்தப்படவேண்டும்.
அதே வேளை இது சம்பந்தமான செய்திகளை முக நூலில் தமிழ் மொழியில் பதிவிட்ட சிலர் ஆபிரிக்க நாடொன்றில் நிகழ்ந்த இது போன்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்களை பிரசுரித்து இவர்கள்தான் அந்த பாதிக்கப்பட்ட தமிழ் பெண்கள் போன்று காட்டியதோடு இக்கொடுமையை செய்தோர் முஸ்லிம்கள் எனவும் இன ரீதியில் எழுதியமை மிக மோசமான வக்கிரப்புத்தி கொண்ட செயலாகவும் தமிழ் பெண்களை அவமதிக்கும் செயலாகவும் காண்கிறோம். மேற்படி முகநூல் எழுத்தாளர்களும் கட்டாயம் விசாரிக்கப்பட வேண்டும் என பொலிசாரை வேண்டுகிறோம்.
பொதுவாக குற்றவாளிகள் அனைத்து சமூகத்திலும் உண்டு. வட மாகாணத்தில் வித்யாவை வல்லுறவுக்குட்படுத்தி கொன்றவர்கள் அவரது இனத்தை சேர்ந்தவர்களே என்பதற்காக அதே இனத்தையும் மதத்தையும் முழுமையாக குற்றம் சாட்ட முடியாது. அதே போல் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்காக முஸ்லிம் சமூகம் வக்காலத்து வாங்கினால் மட்டுமே அதற்காக முஸ்லிம் சமூகத்தை குற்றம் சாட்ட முடியும். ஆனாலும் இச்செயலை எந்தவொரு முஸ்லிமும் அனுமதிக்கவில்லை என்பதை அதற்கான கண்டனங்களை சமூக வலையத்தளங்களில் காண்பதன் மூலம் புரிந்து கொள்கிறோம்.
ஆகவே இது பெண்ணாசை பிடித்த வெறியர்களின் செயலா அல்லது தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் இன விரிசலை ஏற்படுத்த திட்டமிட்ட செயலா என்பதை அரசு கண்டு பிடிப்பதுடன் குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என உலமா கட்சி வலியுறுத்துகிறது என அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
யுவவயஉhஅநவெள யசநய