மலையக தமிழ் கட்சிகளின் அணுகுமுறையைக்கூட இலங்கை முஸ்லிம் கட்சிகள் தெரிந்து கொள்ளாமல் இருப்பது கவலையான விடயம் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கட்சி காரியாலயத்தில் நடை பெற்ற ஆதரவாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழ் கட்சிகள் இந்திய பிரதமரிடம் மலையக மக்களுக்கென இருபத்தையாயிரம் வீடுகள் தேவை என கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதனை சிங்கள பேரினவாதிகள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்பதுடன் மலையக மக்கள் இப்போது இலங்கை பிரஜைகளே என்பதால் இந்தியாவின் உதவியுடன் வீடுகள் அமைப்பது இந்து மத ஆக்கிரமிப்பு என சத்தமிடவில்லை. காரணம் மலையக கட்சிகள் இந்திய அரசுடன் நெருக்கமான, பகிரங்கமான உறவுகளை கொண்டிருக்கிறது என்பது சிங்கள இனவாதிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் தெரியும்.
அதேவேளை முஸ்லிம்கள் பாரிய வீட்டுப்பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். மலையக வீடுகளை விட மோசமான வீடுகளில் கொழும்பு முஸ்லிம்களில் பெரும்பாலானோர் வாழ்கின்றனர். கிழக்கு மாகாண முஸ்லிம்களும் இப்பிரச்சினைக்கு முகம் கொடுப்பதுடன் பெண்களின் திருமணம் கூட தள்ளிப்போகும் நிலையை காண்கிறோம்.
இவ்வாறான நிலைகளுக்கு இலங்கை முஸ்லிம்கள் குவைத், சவூதி போன்ற நாடுகளின் தனிநபர்களின் உதவியினால் சில நூறு வீடுகள் கட்ட நினைத்தால் கூட அதனை சிங்கள இனவாதிகள் இனவாதமாக சித்தரிப்பதையும் அறபு குடியேற்றம் நடக்கப்போவதாக கூறுவதையும் காணலாம். அவற்றை எதிர்த்து சிங்கள அரசியல்வாதிகளின் துணையுடன் விளக்குவதற்கான முயற்சிகள் கூட முஸ்லிம்களிடம் மிக குறைவு.
இவ்வாறான கருத்துக்களுக்கு என்ன காரணம் என்பதை முஸ்லிம்கள் ஆராய வேண்டும். ஆக குறைந்தது இலங்கை அரசு நல்லுறவு கொண்டாடும் பாகிஸ்தானுடனாவது இலங்கை முஸ்லிம்களுக்கு நல்லுறவு, மற்றும் அரசியல் ரீதியிலான தொடர்புகள் உள்ளனவா என்று கேட்டால் இல்லை என்ற பதிலையே காணலாம். இதற்கு காரணம் என்ன?
பேரினவாதம் பற்றிய மித மிஞ்சிய அச்சமா அல்லது முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு முன்னெடுக்காத செயற்பாடுகளா என்பது ஆராயப்பட வேண்டிய விடயம்.
உண்மையில் உலமா கட்சி 2006 முதல் வலியுறுத்தும் முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தால் அக்கூட்டமைப்பு பாகிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகளின் அரசாங்கங்களுடன் இலங்கை அரசாங்க அணுசரணையில் தொடர்புகளை ஏற்படுத்தி பல விடயங்களை சாதித்திருக்க முடியும். அதுவும் இல்லை என்ற சூழ் நிலையில் முஸ்லிம் பெயரில் உருவாகி முஸ்லிம்களின் அதிக வாக்குகள் பெற்ற கட்சி கூட இவற்றுக்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. முஸ்லிம் மக்களும் மாற்று கட்சிகளை பலப்படுத்துவதனூடாக புதிய மாற்றங்களை நோக்கி நகர வேண்டும் என்ற அக்கறையுமின்றி உள்ளனர்.
இந்நிலை தொடர்வதா இல்லையா என்று தீர்மானிக்கும் அதிகாரம் முஸ்லிம் பொது மக்கள் கையிலேயே உள்ளது.