-எம்.வை.அமீர்,யூ.கே.காலிதின்-
சாய்ந்தமருத்தில் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாணக்காரியாலயத்தை இடமாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டத்துக்கு தயாராகிவருவதாக, கல்முனைத் தொகுதி இளைஞர் பாராளமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதி அமைப்பாளரும் கல்முனைத் தொகுதி ஒருங்கிணைப்பாளாருமான பைசர் தில்ஷாத் அஹமட் தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருதில் அமைந்துள்ள மாகாணக்காரியாலயத்தை இடமாற்றுவதற்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை பத்திரிகைகளுக்கு தெளிவூட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு 2017-05-11 ஆம் திகதி மிஸ்ரோ அமைப்பின் தலைவரும் சாய்ந்தமருது இளைஞர் போரத்தின் பிரதித் தலைவருமான இஸ்மாயில் இக்தார் தலைமையில் சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின்போதே பைசர் தில்ஷாத் அஹமட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நல்லதையே செய்யும் என எதிர்பார்த்த நல்லாட்சி அரசு தமிழ் பேசும் மக்கள் செறிந்துவாழும் பிரதேசத்தில் அமைந்துள்ள இவ்வாறான காரியாலயங்களை பெரும்பான்மை மக்கள் வாழும் பிரதேசத்துக்கு இடமாற்ற எத்தனிப்பது நல்லாட்சிமீது தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சீர்குலைப்பதாகவும் இவ்வாறான செயற்பாடுகளை தாங்கள் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
அரச கட்டிடம் இல்லை என்ற காரணத்தைக்கூறி வெளிநாட்டு வேலைவாய்ப்பு காரியாலயத்தை அம்பாறைக்கு இடமாற்றிய நல்லாட்சிஅரசு அரச கட்டிடத்தில் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாணக்காரியாலயத்தை அம்பாறையில் உள்ள வாடகைக்கட்டிடம் ஒன்றுக்கு இடமாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் முயச்சியானது ஆநீதியானது பாரபட்சமானதுமானது என்றும் தெரிவித்தார்.
குறித்த செயற்பாடு தொடர்பாக ஜனாதிபதி பிரதமர் மற்றும் முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினர்கள் விசேடமாக பிரதேச அரசியல்வாதிகளுக்கு தாங்கள் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர்களும் இதுவிடயாமாக சம்மந்தப்பட்டவர்களுக்கு அழுத்தங்களைக் கொடுத்து பிரதேச kஇழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதாகவும் விசேடமாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளமன்றதில் இதுவிடயமாக உரையாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு தொடராக இப்பிரதேசம் அரசாலும் அரசியல்வாதிகளாலும் புறக்கணிக்கப்படுமாக இருந்தால், எதிர்காலத்தில் அரசும் அரசியல்வாதிகளும் இப்பிரதேச இளைஞர்களின் சக்தியை புரிந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.
மிகுந்த விசுவாசப்போக்குடன் செயற்படும் இப்பிராந்திய இளைஞர்கள் இடமாற்றம் தொடர்பான செயற்பாடுகளைக் கேள்வியுற்று கொந்தளிப்பதாகவும் இவ்வாறான முயற்சிக்கு சில உத்தியோகத்தர்களும் உடந்தையாக இருப்பதாகவும் அவர்களை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் தாங்களால் கௌரவமாக மதிக்கப்படும் அவர்கள் இவ்வாறான அநீதியான செயற்பாடுகளுக்கு துணைபோகக்கூடாது என்றும் தெரிவித்தார்.
இளைஞர்கள் சத்தியாக்கிரக போராட்டம் ஆர்ப்பாடம் என பல்வேறு செயற்பாடுகளுக்கு தயாராவதாகவும் அவர்களை தாங்கள் தடுத்து அரசியல்வாதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் மட்டத்தில் குறித்த பிரச்சினையை தீர்த்துவைக்க முனைவதாகவும் நிலைமை மோசமாகுமானால் இளைஞர்களின் செயற்பாடுகளை தாங்களால் தடுக்கமுடியாது என்றும் தெரிவித்தார்.
நிகழ்வின்போது அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளமன்ற உறுப்பினர் ஸமான் முகம்மட் ஸாஜித்,சக்கி செய்ன் ஆகியோரும் கருத்துக்களை தெரிவித்ததுடன் உதவும் கரங்கள் நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.ரி.ஜாஸீர் அகமட்டும் பிரசன்னமாகியிருந்தார்.