மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 30 மியன்மார் – ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பினை நாம் ஏற்றுக்கொள்வதுடன் முஸ்லிம்கள் உட்பட அனைவரும் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார்.
தற்போது மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 30 மியன்மார் அகதிகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலே உலமா சபையின் தலைவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, ‘எம்மை நாடி வந்த எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் விருந்தாளிகளாக அவர்களைக் கருதி அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும். அவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என்றே இஸ்லாம் போதித்துள்ளது. அவர்கள் தமக்கேற்படும் இன்னல்களிலிருந்தும் தவிர்ந்து கொள்வதற்காகவே நாட்டில் இருந்தும் வெளியேறி வந்திருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களை அவர்களது நாட்டுக்கே திருப்பியனுப்ப வேண்டும் என்று கோருவது தவறானதாகும். எமது நாட்டில் சட்டமொன்று இருக்கிறது. நீதிக் கட்டமைப்பொன்று இருக்கிறது. நாம் சட்டத்தை மதிப்பவர்கள் எனவே நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பினை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார்.
கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி மியன்மார் – ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் 30 பேரும், இரு இந்தியர்களும் அவுஸ்திரேலியாவுக்கு இலங்கை கடல் எல்லையூடாக படகொன்றில் பயணித்துக்கொண்டிருந்த போது கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். வடக்கு கடல் எல்லையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் அகதிகள் 30 பேரையும் சிறைக்கு அனுப்பாது மிரிஹான தடுப்புக்காவல் முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார். மியன்மார் முஸ்லிம் அகதிகள் மியன்மாருக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள். அவர்களுக்கு நாடொன்று புகலிடம் வழங்கும் வரை இலங்கையில் தடுப்புக்காவல் முகாமில் வைக்கப்பட்டிருப்பார்கள் என அவர்கள் சார்பில் ஆஜரான ஆர்.ஆர்.ரி.சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மியன்மார் அகதிகளில் 7 பெண்கள், 7 ஆண்கள் மற்றும் 16 சிறுவர், சிறுமிகள் அடங்குகின்றனர்.
ARA.Fareel