நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 100 பேர் வரையில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்து வரும் அடைமழை காரணமாக தென் மாகாணம் முற்றாக இயல்பு நிலையை இழந்துள்ளது. ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மத்துகம பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை காப்பாற்றும் நடவடிக்கையில் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும ஈடுபட்டுள்ளார்.
கொட்டும் மழையிலும், வெள்ளத்திலும் மக்களோடு இணைந்து களப்பணியில் பாலித்த ஈடுபட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
மத்துகம, அகலவத்த, வெயன்கல்ல, பொலேகொட, மஹாகம, பந்துரலிய நுவர உட்பட பல பிரதேசங்களில் பாரிய உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த மக்களை மீட்பதற்காக பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அந்த பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்தமையினால் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அமைச்சர் குறித்து பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்று பதிவிடப்பட்டுள்ளது.
அந்த பதிவில் “கட்சி அவசியமில்லை. மக்களின் பிரச்சினையை அறிந்து கொள்ளும் இவ்வாறான தலைவர்கள் நாட்டில் மேலும் உருவாக வேண்டும்......! மதிப்பிற்குரிய பாலித்த தெவரப்பெரும அவர்களே! .. என குறிப்பிட்டு அவருடைய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.