இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்து வந்த மோசடிக் கும்பல் ஒன்றை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 05ம் திகதி கண்டி தனியார் மருத்துவமனையொன்றில் குழந்தையொன்றை பிரசவிக்க சென்ற தனது தாயார் வெறும் கையுடன் வீடுதிரும்பியமை குறித்து அவரது புதல்வி கண்டி பொலிசில் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தார்.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிசார், முறைப்பாட்டாளரான யுவதியின் தாயார் பெற்றெடுத்த குழந்தையை கண்டியில் வேறு இரண்டு பெண்களுக்கு விற்பனை செய்திருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
அத்துடன் குழந்தையை பணம்கொடுத்து வாங்கிய பெண்கள் இரண்டு பேரும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் குழந்தைகளை விற்பனை செய்துவரும் மோசடி வர்த்தகத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதற்காக முறைதவறி கர்ப்பம் தரிக்கும் பெண்களை நாடி, அவர்களின் மருத்துவச் செலவுகளை பொறுப்பேற்றுக் கொள்வதுடன், அதன் பின்னர் குழந்தையையும் ஒரு தொகைக்கு வாங்கிக் கொண்டு போலியான ஆவணங்கள் ஊடாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளமை பொலிசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து குறித்த இரண்டு பெண்கள் மற்றும் அண்மையில் குழந்தையொன்றைப் பிரசவித்த பெண் ஆகிய மூவரையும் பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியிருந்தனர்.
மூவருக்கும் பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம், எதிர்வரும் 29ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது. அத்துடன் அண்மையில் பிரசவிக்கப்பட்ட நிலையில் பணம் கொடுத்து வாங்கப்பட்ட குழந்தையை காப்பகத்தில் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.