பொலித்தீன் பாவனையை தடுப்பதற்காக புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுரை வழங்கியுள்ளார்.
அத்துடன் குப்பை நிர்வாகம் தொடர்பில் தேசிய கொள்கையினை ஏற்படுத்துவது தொடர்பிலும் அதற்கு பொறுப்பான அமைச்சுக்கள் மாகாண சபைகளில் யோசனைகளை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாகாண ஆணையாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் இன்று பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலே ஜனாதிபதி இது குறித்து அவதானம் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மாகாண ஆணையாளர்களினால் குறித்த மாகாணங்களில் குப்பை தொடரிபான பிரச்சினைகளுக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த குப்பை பிரச்சினை தொடர்பில் சுற்றாடல் அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள அறிக்கையினை விரைவில் பெற்றுத்தருமாறும் தெரிவித்த ஜனாதிபதி புத்தளம்-அருவக்கலு பிரதேசத்தில் இறக்கும் குப்பைகளை விரைவுப்படுத்துமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் குப்பை பிரச்சினைத் தொடர்பாக முழுமையான அறிக்கையானது தயாரிக்கப்பட்டுள்ள நிலையில்,நாடுபூராகவும் 200 இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதாகவும்,இதில் 25 இடங்கள் மேல்மாகாணத்தில் அமைந்துள்ளதோடு, குறித்த 200 இடங்களில் 20 இடங்கள் மட்டுமே பிரச்சினைக்குறிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.