கம்பளை பிரதேசத்திலிருந்து இரண்டரை வயது சிறுவனொருவன் கடந்த புதன் கிழமை கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் நாடளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் விசேட நடவடிக்கையின் மூலம் குறித்த சிறுவனை பாதுகாப்பாக மீட்டு பொலிசார் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த வகையில் பொலிசாரி துரித நடவடிக்கை பாராட்டுக்குரியதாகும்.
குறித்த சிறுவனைக் கடத்திச் சென்று ஒப்படைப்பதற்கான பிரதான சூத்திரதாரியாக அச் சிறுவனின் மாமா முறையான நபர் ஒருவரே இருந்துள்ளார். சிறுவனின் தாய் குறித்த இளைஞர் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே சிறுவனை கொடுத்தனுப்ப, அவரோ பணத்திற்காக இந்தக் கடத்தல் நாடகத்திற்கு துணை போயுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு சிறுவனைக் கடத்துவதற்கான தூண்டுதலை வழங்கியுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும் என்ன நோக்கத்திற்காக இவ்வாறு சிறுவனைக் கடத்தினர் என்பது இதுவரை அறியப்படவில்லை.
நேற்று மாலை வரை இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களில் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் அவ்வப்போது நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. சில மாதங்களுக்கு முன்னர் புத்தளம் பகுதியில் வைத்து நான்கு வயது சிறுவன் ஒருவன் கடத்திச் செல்லப்பட்டமை நாம் அறிந்ததே. யாசகம் கேட்பது போல் வீட்டுக்குள் வந்த பெண் ஒருவரே அச் சிறுவனை கடத்திச் சென்றிருந்தார். பின்னர் சிறுவன் மீட்கப்பட்டதுடன் இந்தியப் பிரஜை ஒருவர் உட்பட மூவரை பொலிசார் கைது செய்திருந்தனர்.
இவ்வாறான சம்பவங்களிலிருந்து நாம் படிப்பினை பெற வேண்டியது அவசியமாகும். நமது குழந்தைகள் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதமாகும். அவர்களது பாதுகாப்புக்கு நாமே பொறுப்புச் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் நமது பிள்ளைகளின் நடமாட்டங்களை அணு அணுவாக அவதானிக்க வேண்டும். குடும்பத்தவர்கள் என்ற போதிலும் அதிகபட்ச நம்பிக்கையில் பிள்ளைகளை யாரிடமும் ஒப்படைப்பதை பெற்றோர் தவிர்ந்து கொள்ள வேண்டும். அதுமாத்திரமன்றி வீட்டுக்கு வரும் அறிமுகமற்ற நபர்களிடம் பிள்ளைகளை நெருங்க அனுமதிப்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
பணத்துக்காக எதையும் செய்கின்ற மனிதர்கள் அதிகரித்துவிட்ட இக் காலத்தில், விழிப்புணர்வாக இருப்பதன் மூலம் மாத்திரமே நமது பிள்ளைகளை பாதுகாக்க முடியும்.
அதேபோன்றுதான் நெருங்கிய உறவினர்களால், சொந்த வீட்டுக்குள் வைத்தே சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
குழந்தைகளை உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு தாய்மார் தொழிலுக்காக வெளிநாடு செல்வதும் இவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. இலங்கையில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் 25 வீதமானவை உறவினர்களாலேயே இடம்பெறுகிறது என நீதியமைச்சின் அண்மைய அறிக்கை ஒன்றும் கூறுகிறது.
எனவேதான் பெற்றோர் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு விடயத்தில் மிகவும் அவதானமாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்