Top News

பாரீஸில் மீண்டும் கொள்ளையர்கள் அட்டூழியம்


பிரான்ஸ் நாட்டில் ஆயுதம் ஏந்திய இரண்டு நபர்கள் கடிகாரக்கடை ஒன்றில் சுமார் 9,00,000 யூரோ மதிப்புள்ள கடிகாரங்களை கொள்ளையிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள Champs-Élysées என்ற பகுதியில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று காலை சுமார் 11 மணியளவில் இப்பகுதியில் உள்ள கடிகாரக்கடைக்குள் இருவர் நுழைந்துள்ளனர். ஊழியரை தாக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டிய இருவரும் அங்கு வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கடிகாரங்களை அள்ளிச்சென்றுள்ளனர். இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பும்போது நபர் ஒருவர் தன்னுடைய கைப்பேசியில் இருவரையும் புகைப்படம் பிடித்துள்ளார்.
கொள்ளை நிகழ்ந்த இடத்திற்கு வந்த பொலிசார் கொள்ளையர்கள் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளனர். கடையில் கொள்ளைப்போன கடிகாரங்களின் மதிப்பு 9,00,000 யூரோ என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆதாரங்களை சேகரித்துள்ள பொலிசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பாரீஸில் கடந்த அக்டோபர் மாதம் கடிகாரக்கடையில் நுழைந்த சில மர்ம நபர்கள் சுமார் 5,00,000 யூரோ மதிப்புள்ள கடிகாரங்களை திருடிச்சென்றனர். இதே போல், கடந்தாண்டு மார்ச் மாதம் நகைக்கடை ஒன்றில் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை கொள்ளையர்கள் திருடிச்சென்றனர்.
மேலும், கடந்தாண்டு ஜனவரி மாதம் அமெரிக்க மொடலான கிம் கர்தாஷியானை தாக்கி அவரிடம் இருந்த 10 மில்லியன் மதிப்பிலான நகைகளை கொள்ளையர்கள் திருடிச்சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகளவில் சிறந்த சுற்றுலா நகரங்களில் ஒன்றான பாரீஸில் நிகழ்ந்து வரும் தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்களையும் சுற்றுலா பயணிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
lankasri
Previous Post Next Post