ஞானசார தேரரை கைது செய்வதற்கு விஷேட தேடுதல் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பொலிஸ் திணைகளம் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பொலிஸாருக்கு கடமையை செய்யவிடாமல் இடையூறு ஏற்படுத்தியமை, இனங்களுக்கு இடையே அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு அமைவாக அவரை கைது செய்ய இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
ஞானசார தேரரை கைது செய்ய 4 விஷேட பொலிஸ் குழுக்கள் களத்தில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் அவர் நாட்டில் இருந்து வெளியே செல்ல முடியாத வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் - 4 இன் ஊடாக தடை உத்தரவு ஒன்று பெறப்பட்டுள்ளது.
ஞானசார தேரர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் தர வருமாறு ஏற்கனவே அவருக்கு பல தடவைகள் தகவல் வழங்கப்பட்டுள்ள போதும் அவர் அதனை புறக்கணிப்பு செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.