கடந்த பல மாதங்களாக வீடின்றி கடுமையான
கஸ்டங்களோடு கிண்ணியா பிரதேசத்தில் வாழ்ந்து வரும் குடும்பம் ஒன்றின் நிலைமையை
நேரடியாக பார்வையிடுவதற்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG ) யின் தவிசாளர்
பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் , அதன் கிண்ணியா பிரதேச செயற்குழு உறுப்பனரான
சகோ.முபீத் உள்ளிட்ட குழுவினர் இன்று (30.4.2017) நேரில் சென்றிருந்தார்.
கிண்ணியாவின் எல்லைக்கிராமமொன்றில்
கடுமையான வறுமை நிலையில் வாழும் இந்த குடும்பம் தொடர்பாக சில ஊடகங்கள் சில
நாட்களுக்கு முன்னர் செய்திகளை வெளியிட்டிருந்தன.
அந்த செய்திகள் மூலமாக இக்குடும்பத்தின்
பரிதாப நிலைமையினை தெரிந்து கொண்ட NFGG தவிசாளரும், அதன் கிண்ணியா பிரதேச
செயற்குழு உறுப்பினர்களும் அக்குடும்பத்தின் நிலைமைகளை நேரில்
கண்டறிவதற்காக அங்கு சென்றிருந்தனர்.
இரண்டு குழந்தைகள் நிரந்தர நோயாளியாக
இருக்கின்ற நிலையில் இக்குடும்பம் தனக்கு வழங்கப்பட்ட ஒரு சிறு துண்டுக் காணியில்
ஓலைக் கிடுகுகளையும், பொலிதீனையும் கொண்டு சிறு குடிசை அமைத்து மிகுந்த
கஸ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறது.
இவர்களுக்கான ஒரு வீட்டு வசதியை
ஏற்படுத்தும் நோக்கிலேயே இன்று NFGG பிரதிநிதிகள் அங்கு
விஜயம் செய்தனர். இக்குடும்பத்திற்கான வீடமைக்கும் பொறுப்பினை வேறு சில சகோதரர்கள்
பொறுப்பேற்றிருக்கும் நிலையில் இக்குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கான உதவிகளை
வழங்குவதாக NFGG பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.