ஈராக் நாட்டின் மிக பழமையான மோசூல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த 2015ம் ஆண்டு தங்கள் வசமாக்கிக் கொண்டனர். அங்கிருந்தவாறு அண்டைநாடான சிரியாவின் ரக்கா நகரம் உள்ளிட்ட சில பகுதிகளையும் ஆக்கிரமித்தவாறு, மேற்கண்ட நாடுகளில் தீவிரவாத தாக்குதல்களை இவர்கள் அரங்கேற்றி வருகின்றனர்.
ரக்கா நகரை மீட்பதற்காக அமெரிக்க விமானப்படையின் துணையுடன் அந்நாட்டு அரசுப்படைகள் உச்சகட்ட போரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரக்கா நகரின் கிழக்கு வாசல் வழியாக அல்மெஷ்லெப் மாவட்டத்தைக் கடந்து அரசு படைகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் உள்ள பகுதிகளை கைப்பற்றுவதற்காக முன்னேறி வருகின்றனர்.
அல்மெஷ்லெப் மாவட்டத்தின் முக்கிய சோதனைச்சாவடியை அரசுப் படைகள் கைப்பற்றி உள்ளன. இந்த சோதனைச்சாவடி இதுவரை ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இங்கு வாகன தணிக்கை மற்றும் சுங்க வரி மூலம் வசூலிக்கப்பட்ட பணம் முழுவதும் தீவிரவாதிகளின் கருவூலத்தை சென்றடைந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அனேகமாக இன்னும் ஒருவார காலத்திற்குள் ரக்கா நகரம் முழுவதும் அரசுப் படைகள் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருதரப்பு போருக்கு இலக்காகி இருக்கும் ரக்கா நகரில் இருந்து உயிர்தப்புவதற்காக வெளியேறிய 21 பேர் பன்னாட்டு விமானப்படை குண்டுவீச்சில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் கடந்த இரண்டாண்டு காலமாக ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் உள்நாட்டுப்போரில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் உடல் உறுப்புகள் சேதமடைந்து மாற்றுத் திறனாளிகளாக மாறி உள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளது என்பதும் நினைவிருக்கலாம்.
Post a Comment