பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளம் நோக்கி கூலர் வாகனம் ஒன்றில் 38 மாடுகளின் தலையுடன் சுமார் ஆயிரம் கிலோக்கு அதிகமான இறைச்சியை சட்டவிரோதமாக கடத்திச் சென்ற இருவரை இரண்டு இலட்சம் ரூபா தலா இரண்டு ஆள் பிணையில் செல்ல கிளிநொச்சி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கிளிநொச்சி முழங்காவில் பொலிசாருக்கு நேற்றைய தினம் (2) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து சங்குபிட்டி பூநகரி மன்னார் ஊடாக புத்தளத்திற்கு கூலர் ரக வாகனத்தில் வெட்டப்பட்ட நிலையில் 38 மாடுகளின் தலைகளுடன் இறைச்சிகள் கொண்டு செல்லப்பட்டுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வாகனம் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது.
இதன் போது புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் சோதனையிடப்பட்ட வாகனத்தில் சுமார் ஆயிரம் கிலோக்கு அதிகமான மாட்டு இறைச்சி மற்றும் 38 மாட்டு தலைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட இரு சந்தேக நபர்களும் சான்றுப் பொருட்களும் இன்று (3) சனிக்கிழமை நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் வாகனத்தில் சட்டவிரோதமாக குறித்த இறைச்சிகளை கடத்திச் சென்ற இருவரை இரண்டு இலட்சம் ரூபா தலா இரண்டு ஆள் பிணையில் செல்ல கிளிநொச்சி நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன் திருடப்பட்டு வெட்டப்பட்ட 1800 கிலோவுக்கு மேற்பட்ட இறைச்சி மற்றும் 38 மாட்டு தலைகள் திருநகர் சுடலையில் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய கிளிநொச்சி திருநகர் சுடலையில் புதைக்கப்பட்டுள்ளன.
இதன் போது கரைச்சி பிரதேச சபையினர் தங்களது கனரக வாகனத்தின் மூலம் பணியாளர்களையும் கொண்டு பாரியளவில் குழியினை தோண்டி அவற்றை புதைத்தனர்.
மேலும் மாடுகள் கொள்வனவு செய்யதமைக்கோ இறைச்சிக்காக வெட்டப்படுவதற்கோ அல்லது கொண்டு செல்லப்படுவதற்கோ என எவ்விதமான சட்டரீதியான ஆவணங்களும் இவர்களிடம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment