(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
வெள்ளம் வடிந்தும், மலைகள் சரிந்தும், கட்டடங்கள் உடைந்தும் போன வேளையில் கூட இன்று நாட்டின் பல இடங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களை நாங்கள் காணக் கூடியதாக இருக்கின்றது என முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான் ஏ. எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவித்திருப்பதாவது,
இதற்கொரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். ஜனாதிபதி இதனை நேரடியாக முஸ்லிம் எம். பி.மார்கள் அனைவரையும் அழைத்துப் பேசி ஒரு தீர்வுக்கு வர வேண்டும். அதுவன்றி ஒவ்வொருவரிடத்திலும் பேசுவதன் மூலமாக இதற்கு ஒரு நாளும் தீர்வு காண முடியாது என்பதை ஜனாதிபதி நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.
இலங்கை சமாதானப் பேரவையின் செயலாளர் ஜிஹான் பெரேரா நேற்று ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூட முஸ்லிம்களுக்கு எதிராக அவிழ்த்து விடப்பட்டுள்ள வன்செயல்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது இந்த அரசாங்கத்தின் தலையாய கடமை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்ற மே மாதத்திற்குள் முஸ்லிம்களுக்கு எதிரான 21 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அந்த ஊடகச் செய்தி சர்வதேச ரீதியிலும் சென்றுள்ளது.
இன்றும் கூட பல முஸ்லிம் கிராமங்களில் பெண்கள் தறாவீஹ் தொழ பள்ளிவாசலுக்குச் செல்வதற்கு அச்சம் கொண்டுள்ளதாக எமக்கு பல பாகங்களிலிருந்தும் அறிவித்தல் கிடைத்துள்ளன. இந்த நிலை முன்பிருந்ததாக அவர்களே குற்றஞ்சாட்டினார்கள்.
எனவே, கிராமங்களில் இருட்டில், பள்ளிவாசல்களில் தொழும் இடங்களுக்குச் செல்ல வேண்டி இருக்கின்றது. ஆகவே இந்தப் புனிதமான மாதத்தில் தறாவீஹ் போன்ற வணக்க வழிபாடுகளை எந்த பயமும் இல்லாமல் செய்வதற்கு உரிய நல்ல சூழ்நிலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்து தர வேண்டும் என முஸ்லிம் முற்போக்கு முன்னணி செயலாளர் என்ற வகையில் கேட்டுக் கொள்ள விரும்புகின்றோம்.
இதற்கிடையில் சகல பகங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினாலும் மண்சரிவினாலும் பாதிப்பாகியுள்ள முஸ்லிம்களுக்கும் ஏனைய இன மக்களுக்கும் ஆங்காங்கே இருக்கின்ற முஸ்லிம் முற்போக்கு முன்னணி உறுப்பினர்களும் கூட்டு எதிர்க்கட்சி முஸ்லிம் உறுப்பினர்களும் ஒன்றாகச் சேர்ந்து தங்களால் முடிந்த தேவையான நிவாரணங்களை பாதிப்புற்றோருக்குத் வழங்கத் தேவையான சகல உதவிகளையும் செய்யுமாறும் அழைப்பு விடுக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.