ஈராக் நாட்டின் மிக பழமையான மோசூல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த 2015ம் ஆண்டு தங்கள் வசமாக்கிக் கொண்டனர். அங்கிருந்தவாறு அண்டைநாடான சிரியாவின் சில பகுதிகளையும் ஆக்கிரமித்தவாறு, மேற்கண்ட நாடுகளில் தீவிரவாத தாக்குதல்களை இவர்கள் அரங்கேற்றி வருகின்றனர்.
மோசூல் நகரை மீட்பதற்காக அமெரிக்க விமானப்படையின் துணையுடன் அந்நாட்டு அரசுப்படைகள் சுமார் மூன்று மாத காலமாக தீவிரமாக உச்சகட்டபோரில் ஈடுபட்டு வருகின்றனர். மோசூலின் கிழக்குப்பகுதியை கைப்பற்றி உள்ள அரசுப் படைகள் எஞ்சியுள்ள பகுதியையும் மீட்கும் முயற்சியில் மேற்குநோக்கி முன்னேறி வருகின்றனர்.
இருதரப்பனிருக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில் அங்குள்ள பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் ஏதும் வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பவில்லை. இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) கவலை தெரிவித்துள்ளது.
மோசூலில் சிக்கியிருக்கும் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள், பத்திரமாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என யுனிசெப் குறிப்பிட்டுள்ளது. “மோசூல் நகரில் இருந்து வரும் செய்திகள் மிகவும் கவலையூட்டும் வகையில் அமைந்துள்ளன. அங்கு நடைபெற்று வரும் போரில், குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படும் செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. போர்முனையில் இருந்து தப்பி வர முயற்சிப்பவர்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களில் ஒவ்வொரு மணி நேரமும் பல உயிர்கள் பறிபோவது கவலைக்குரியது.
மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வீடுகள், நீர்நிலைகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 7 லட்சம் மக்கள் வசிக்கும் மோசூல் நகரில் இருந்து பெரும்பாலான மக்கள் வெளியேறி அண்டை நகரங்களில் உள்ள தற்காலிக அகதிகள் முகாம்களிலும் தங்களது உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். சொந்த நிலம் மற்றும் வீடுகளை இழந்து வெளியேற மனமில்லாத பல லட்சம் மக்கள் இன்னும் மோசூல் நகரில் அடைபட்டுக் கிடக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலைமலர்
Post a Comment