அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
சவுதி அரேபியாவில் சிகரெட் மற்றும் குளிர்பானங்களுக்கு பாவத்திற்கான வரி என்று கூறப்படும் புதுவகை வரியை அங்குள்ள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிகளின்படி, புகைபிடிப்பவர்கள் இனிமேல் தங்கள் சிகரெட்டிற்கு இருமடங்கு விலை கொடுக்கவேண்டும் என கூறப்படுகிறது.
'பாவத்திற்கான வரி' என்று கூறப்படும் இந்த வரி, சிகரெட்டுகளுக்கு மட்டுமின்றி, கார்பனேற்றப்பட் டிரிங்க்ஸ் எனப்படும் குளிர்பானங்களுக்கும் பொருந்தும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கச்சா எண்ணெய் விற்பனை வருவாய் குறைவை ஈடுகட்டுவதற்கான இந்த வரி விதிப்பு, சவுதி அரேபியாவில் மட்டுமல்ல, வளைகுடா நாடுகள் அனைத்திலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பல தசாப்தங்களாக வரியில்லா அமைப்பு மற்றும் அரசாங்கத்தின் பெரிய அளவிலான மானியங்களாலும் சவுதி அரேபிய மக்கள் பயனடைந்துள்ளனர்.
வரி காரணமாக விலை இருமடங்காக அதிகரிக்க இருப்பதால், பெருமளவு லாபம் ஈட்டுவதற்காக பல வர்த்தகர்கள் சிகெரெட்டுகளை பதுக்கி வைக்கத் தொடங்கியிருப்பதாக சவுதி அரேபியாவின் உள்ளூர் ஊடகங்கள் குற்றம்சாட்டி வருகின்றன.
சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த வரியானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களின் மீது மட்டும் விதிக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பொருட்களால் தனிநபருக்கு அல்லது அரசுக்கு மருத்துவ செலவினங்கள் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அதிகாரிகள், இந்த வரி விதிப்பால் அவை கட்டுக்குள் கொண்டுவரப்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
Post a Comment