எம்.ஐ.அப்துல் நஸார்
அண்மை நாட்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட வெறுக்கத்தக்க நடவடிக்கைகள், பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் உடனடியாக சட்டத்தை அமுல் செய்து சந்தேக நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு (OIC) தெரிவித்துள்ளது.
சவூதியின் ஜித்தாவை மையமாக கொண்டு செயற்படும் 57 முஸ்லிம் நாடுகளின் கூட்டுறவில் இயங்கிவரும் குறித்த ஸ்தாபனத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி யூசுப் அல் ஒதைமீன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை முஸ்லிம்களுக்கு முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் தமது அமைப்பு தொடர்ந்தும் வழங்குமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் மத்தியில் அச்ச உணர்வையும் அவநம்பிக்கையினையும் உருவாக்கும் தீவிரப்போக்குக்கொண்டவர்களால் மேற்கொள்ளப்படும் வெளிப்படையான வன்முறை நிலைமைக்கு எதிராக இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் இஸ்லாமிய ஒத்துழைப்பிற்கான அமைப்பு வழங்கும். வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் மிகுந்த கரிசனைக்குரியனவும் அழ்ந்த கவலைக்குரியனவுமாகும் எனவும் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பொதுச் செயலாளர் கலாநிதி யூஸுப் அல்-ஒதைமீன் சமூகங்களுக்கிடையே அமைதிக்கும் சமாதானபூர்வமான உறவுக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கும் அதேவேளை, சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறும், சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறும், அவற்றிற்குக் காரணமானவர்களை சட்டத்தின்முன் நிறுத்துமாறும் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகம் இலங்கையில் நீண்டகால இருப்பைக் கொண்டுள்ளதோடு, ஏனையோருடன் சமாதானமாகவும் இணக்கப்பாட்டுடனும் வாழும் பாரம்பரியத்தையும் கொண்டுள்ளது. அத்துடன் ஒட்டுமொத்தமாக நாட்டின் கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்திற்கும் முஸ்லிம் சமூகம் பங்களிப்புச் செய்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment