Top News

அமைச்சர் றிஷாதின் உயிரை பணயம் வைக்கும் துணிவுமிக்க பாராளுமன்ற பேச்சுக்கள்



அண்மைக் காலமாக அமைச்சர் றிஷாத் பாராளுமன்றத்தில் பேசுகின்ற பேச்சுக்களை அவதானிக்கும் போது அதில் எந்த விதமான ஒழிவு மறைவுகளுமின்றி  அரசை நேரடியாக தாக்கி பேசுவதை அவதானிக்க முடிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கொண்டு வந்த ஒத்தி வைப்பு பிரேரணையில் உரையாற்றிய அமைச்சர் றிஷாத் குருநாகலில் வைத்து ஞானசார தேரரை கைது செய்வதற்கு பொலீசார் மேற்கொண்ட முயற்சிகள் நாடகம் என நேரடியாகவே கூறி இருந்தார். இன்று ஜெனீவா மனித உரிமைகள் பிரேரணை தொடர்பில் பாராளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் றிஷாத் ஞானசார தேரரை கைது செய்ய நான்கு போலிஸ் குழுக்களை நியமித்து அரசு பூச்சாண்டி காட்டுவதாக நேரடியாகவே கூறி இருந்தார்.

இந்த பேச்சுக்கள் பேசுவதற்கு அலாதித் துணிவு வேண்டும். இவ்வரசானது ஞானசார தேரரை கைது செய்ய மேற்கொள்ளும் முயற்சிகள் போலியானது என்பது வெளிப்படையாகவே விளங்குகிறது. இன்று ஆசாத் சாலி ஜனாதிபதி கூறினால் தாங்கள் ஞானசார தேரரை கைது செய்ய தயாராக இருப்பதாக பொலிசார் தன்னிடம் கூறியதாக கூறியுள்ளமை இதனை இன்னும் தெளிவாக்குகிறது. இது தொடர்பில் முஸ்லிம் அரசியல் வாதிகள் யாருமே இப்படி காட்டமான உரையை ஆற்றி இருக்கவில்லை.இரு நாட்களுக்கு முன்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஹக்கீம் இனவாத முன்னெடுப்புக்கள் அரசை கவிழ்க்கவே என அரசுக்கு  சார்பான அறிக்கையையே விட்டிருந்தார்.

இப்படியான பேச்சுக்களை அமைச்சர் றிஷாத் தொடர்வாராக இருந்தால் ஆளும் அரசின் இரு தேசிய கட்சிகளின் அதிக எதிர்ப்பை பெறுவார். அமைச்சர் றிஷாத் இவ்வாறு பேசி ஆளும் ஆட்சியாளர்களின் அதிக எதிர்ப்பை மக்களுக்காக சம்பாதித்துள்ளார் என்பதே உண்மை. இன்று அவர் இனவாதிகளிடத்திலும் ஒரு வில்லனாகவே பார்க்கப் டுகிறார்.  குருநாகலில் வைத்து ஞானசார தேரரை கைது செய்ய நாடகம் அரங்கேறிய போது கூட ஞானசார தேரர் அமைச்சர் றிஷாதின் பெயரைக் கூறி தூற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இனவாத ஊடகங்களை எடுத்துக்கொண்டால் நாளாந்தம் அமைச்சர் றிஷாதை இகழ்ந்து கொண்டிருக்கின்றன.

பெரும்பான்மை இன மக்களிடத்தில் மாத்திரமல்ல. முஸ்லிம்களின் விடயத்தில் தமிழ் தலைவர்களிடத்திலும் துணிவுடன் பேச தவறவில்லை. இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் றிஷாத் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு தடையாக இருப்பதாகவும் நேரடியாக கூறி அவர்களையும் விமர்சித்திருந்தார். துணிவுடன் குரல் கொடுப்பதானது பலவாறான அச்சுறுத்தல்களை தானாக தேடிச் செல்வதற்கு சமனாகும். முஸ்லிம்களுக்காக அனைவருடன் கருத்தியல் முரண்பாடு கொண்டு துணிவுடன் குரல் கொடுத்தால் அமைச்சர் றிஷாதுக்கு அச்சுறுத்தல் வருகின்ற போது உதவப் போவது யார்?

அமைச்சர் றிஷாத் இவ்வாறு மக்களுக்காக பலருடன் முரண்பட்டு துணிவுடன் குரல் கொடுப்பதன் காரணமாக தனது உயிரை பணயம் வைத்துள்ளார் என்பதே உண்மையாகும். அன்று மறைந்த மு.காவின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் எவ்வாறு மரணத்தை எதிர்பார்த்து கபன் சீலையோடு திரிந்தாரோ அதே நிலையில் தான் அமைச்சர் றிஷாதும் திரிகிறார். இதுவெல்லாம் எதற்காக? எமது முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்ட பற்றுக்கல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்? அமைச்சர் றிஷாதின் துணிவுமிக்க பேச்சுக்களால் அவர் ஏந்தளவு முஸ்லிம்களின் எதிரிகளிடத்தில் எதிர்ப்பை சம்பாதிக்கின்றாரோ அதை விட அதிகமான ஆதரவை முஸ்லிம்கள் அவருக்கு வழங்க வேண்டும்.

அல் ஹாபிழ் அஸாம் அப்துல் அஸீஸ் 

Post a Comment

Previous Post Next Post