ஏ.ஆர்.ஏ. பரீல்
நாட்டில் இனங்கள் மற்றும் மதங்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை குறித்து நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் முஸ்லிம் அமைச்சர்களும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை பிரதிநிதிகளும் நாட்டில் சமகாலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை விளக்கி அவற்றுக்கு உடன் நடவடிக்கைகளைக் கோரினார்கள்.
முஸ்லிம்களுக்கு எதிராக ஞானசார தேரரே மிகத் தீவிரமாக செயற்பட்டு வருகிறார். ஆனால் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு மௌனம் காக்கிறது. கடந்த கால அரசாங்கத்தில் உலமா சபை ஞானசார தேரருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் பலன் ஏற்படவில்லை.
அவர் வீதியில் இறங்கி முஸ்லிம்களுக்கு எதிராகவும் இஸ்லாத்துக்கு எதிராகவும் விமர்சனங்களை வெளியிடுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி ஜனாதிபதியை வேண்டிக் கொண்டார்.
நாம் இவ்விடத்துக்கு தீர்வொன்றினை நாடியே வந்துள்ளோம். தீர்வே எமக்கு முக்கியம். பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருப்பதில் பயனில்லை என்றும் அவர் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினார்.
முஸ்லிம்களாகிய நாம் பிக்குமார்களை கண்ணியப்படுத்துகிறோம். அவர்கள் நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஞானசார தேரர் ஏன் முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாறு செயற்படுகிறார். அவரை அழைத்து அவரிடம் இது பற்றிக் கேளுங்கள். முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வொன்று பெற்றுத்தாருங்கள் என்றும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி ஜனாதிபதியிடம் வேண்டிக்கொண்டார்.
நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ரிஸ்வி முப்தி இவ்வாறு தெரிவித்தார்.
தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கிறிஸ்தவ சமய விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகிய சமய விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன், அமைச்சர்களான எம்.எச்.ஏ.ஹலீம், ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசிம், பைசர் முஸ்தபா, ரிஷாத் பதியுதீன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரும் நாட்டில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் பள்ளிவாசல் தாக்குதல்கள் , முஸ்லிம் வர்த்தக நிலைய தாக்குதல்கள் தொடர்பில் தங்கள் கண்டனங்களை வெளியிட்டனர்.
சட்டத்தை எவ்வித பாகுபாடுகளுமின்றி அமுல் நடத்தும்படி ஜனாதிபதியை அவர்கள் வேண்டிக் கொண்டனர்.
வில்பத்து விவகாரமும் இங்கு கலந்துரையாடப்பட்டது. முகநூல் பதிவுகளில் வெளியிடப்பட்டு வரும் இன, மத பேதங்களை தோற்றுவிக்கும் செயற்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
கடந்த சில வாரங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக 6 முறைப்பாடுகள் பொலிஸில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தந்துரையில் முஸ்லிம் இளைஞன் புத்தருக்கு எதிராக வெளியிட்ட முகநூல் பதிவு தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
கண்டி, அஸ்கிரிய, மல்வத்த பீடங்களிலிருந்து கலந்துகொண்ட குருமார்கள், பொலிஸார் தோரயாயவில் ஞானசார தேரரை கைது செய்ய முயற்சித்தமை தொடர்பில் தங்களது கண்டனங்களை வெளியிட்டனர். அது தவறு என்றும் சுட்டிக்காட்டினர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வமத தலைவர்களின் கூட்டத்தை ஒவ்வொரு மாதமும் நடத்தி பிரச்சினைகளை உடனுக்குடன் இனங்கண்டு தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தார். சட்டமும் ஒழுங்கும் பாகுபாடின்றி அமுல் நடத்தப்படும் என்றும் கூறினார்.