அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
கடந்த 2003-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம் அது. இந்தியாவின் லக்னோ ரயில்பாதையில் நடந்துகொண்டிருந்தான் சிறுவன் ரியாஸ் அகமது. ரயில் சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தால்... மிக வேகமாக ரயில் வந்துகொண்டிருக்கிறது. ரியாஸுக்கு முன்னால் குழந்தைகள் தண்டவாளத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர். குழந்தைகளைப் பார்த்து, 'ரயில் வருகிறது.... ஓடுங்கள் ' எனக் கத்துகிறான் ரியாஸ். எந்தப் அன்பான . விளையாட்டு ஆர்வத்தில், ரியாஸின் சத்தம் குழந்தைகளின் காதில் விழவில்லை. குழந்தைகளை நோக்கி மின்னல்வேகத்தில் ஓடுகிறான்.
தண்டவாளத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியே தூக்கிப் போடுகிறான்.
ரயில்பாதையிலிருந்து கடைசிக் குழந்தையையும் வெளியேற்றிய ரியாஸ், தண்டவாளத்தில் வழுக்கி விழுந்துவிட்டார். ரயில் அவர்மீது ஏறிச் செல்ல, வலதுகை முற்றிலும் துண்டானது. இடதுகை மணிக்கட்டையும் இழந்தார். வலது காலையும் இழந்தார். ஆனாலும், ஐந்து குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய மகிழ்ச்சி, சிறுவன் ரியாஸின் மீதிக் காலத்தை உற்சாகமாகவே வாழவைத்தது. குடியரசுத் தலைவர், 'துணிவுமிக்கச் சிறுவன் என்ற விருதை ரியாஸுக்கு வழங்கி மகிழ்ந்தார்.
கை-கால் இழந்த சிறுவனை, லக்னோவில் உள்ள சிட்டி மான்டென்சரி பாடசாலை அரவணைத்துக்கொண்டது. 12-ம் வகுப்பு வரை கல்வி முதல் உணவு வரை அனைத்தையும் இலவசமாகவே ரியாஸுக்கு வழங்கியது. ஆனால், பாடசாலையில் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்குரிய சிறப்புச் சலுகை வழங்கப்படவில்லை. துணிவுமிக்க ரியாஸும் சலுகையை எதிர்பார்க்கவும் இல்லை. மற்ற குழந்தைகள்போலவே ஆசிரியர்கள் அவரையும் நடத்தினர்.
அந்தத் துயரச் சம்பவம் நடந்து 14 ஆண்டுகள் ஓடிவிட்டன. ரியாஸும் வளர்ந்து இளைஞராகிவிட்டார். கை போனாலும் சளைக்காத அவர், கால்களால் எழுதக் கற்றுக்கொண்டார். தற்போது, ஐ.எஸ்.சி 12-ம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ள ரியாஸ், 79.25 சதவிகித மதிப்பெண் பெற்று பாஸாகியுள்ளார். சந்தோஷத்தில் திளைத்த ரியாஸுக்கு, நாட்டின் பல பகுதிகளிலிருந்து வாழ்த்து குவிந்துகொண்டிருக்கிறது.
பாடசாலை ஆசிரியர்கள், நண்பர்களின் வாழ்த்து மழையில் நனைந்த ரியாஸ், அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.
பாடசாலை முதல்வர் வினிதா கம்ரான் கூறுகையில், '' ரியாஸ் காலால் தேர்வு எழுதப் பழகிக்கொண்டாலும், தேர்வு அறையில் அவருக்கு உதவ, எழுத்தர் ஒருவர் வழங்கப்பட்டது. குறித்த நேரத்தில் அவரால் தேர்வை எழுதி முடிக்கவேண்டும் என்பதால், இந்த ஏற்பாட்டைச் செய்தோம்.
இந்தியில் 99, ஆங்கிலத்தில் 92 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார். பணிவான அன்பான மாணவர். தங்கமான குணம்கொண்ட இளைஞர். குடியரசுத் தலைவர் விருதுபெற்ற ரியாஸ், எங்கள் பாடசாலையின் அடையாளம். அவரது பிற்கால வாழ்க்கை சிறக்கும் வகையில், மேற்படிப்பு படிக்கவைக்க முடிவுசெய்துள்ளோம்'' என்றார்.
ரியாஸின் தந்தை முகமது அகமது, ஒரு கூலித் தொழிலாளி. மகனது சாதனை அவரை மீண்டும் ஒருமுறை பெருமைக்குள்ளாக்கியது. கை, கால் துண்டான நிலையில் அவனைப் பார்த்தபோது, எனக்கு உயிரே போய்விட்டது. அப்போது, என் மகன் செய்த காரியம் என்னை பெருமைகொள்ள வைத்தது.
சிறுவயதில், மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். அவனைத் தேற்றிக் கொண்டுவருவது கடும் சிரமமாக இருந்தது. நாளைடைவில், அதிலிருந்து மீண்டு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். இப்போது மீண்டும் என்னைப் பெருமைப்படவைத்துள்ளான்'' என்கிறார் சந்தோஷம் தாளாமல்.
இளைஞர் ரியாஸ், 'இந்த வெற்றிக்கு, கடின உழைப்பும் ஆசிரியர்கள் அளித்த உற்சாகமுமே காரணம்' என்கிறார்.
Post a Comment