Top News

தென்ஆப்பிரிக்காவுடன் நாளை பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியில் இந்தியா



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை நாளை எதிர்கொள்கிறது. அரையிறுதிக்கு முன்னேற நாளைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

மினி உலககோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது .

இதில் 8 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

நடப்பு சாம்பியனான இந்திய அணி ‘பி’ பிரிவில் உள்ளது. பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 124 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. 2-வது போட்டியில் இலங்கையிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை நாளை (11-ந்தேதி) எதிர்கொள்கிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற்றால் தான் அரைஇறுதிக்கு தகுதி பெற முடியும். தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.

இலங்கைக்கு எதிராக 321 ரன் குவித்தும் இந்தியா தோற்றது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இதனால் தற்போது தென் ஆப்பிரிக்காவை வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் உள்ளது. பேட்டிங்கில் பலத்தை வெளிப்படுத்திய வீரர்கள் பந்துவீச்சில் சொதப்பி விட்டனர். வெற்றி பெற வேண்டிய ஆட்டத்தில் கோட்டைவிட்டது. இதனால் வாழ்வா? சாவா? நெருக்கடியில் உள்ளது.

தென்ஆப்பிரிக்காவை கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்பதால் இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 போட்டியில் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட ஆர்.அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இதேபோல வேகப்பந்தில் முகமது ‌ஷமிக்கும் வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்.

தென்ஆப்பிரிக்க அணி பலம் பொருந்தியவை என்பதால் அந்த அணியை வீழ்த்த இந்திய வீரர்கள் கடுமையாக போராட வேண்டும். அந்த அணியை தோற்கடிப்பது என்பது சவாலானது.

இந்திய அணியை போன்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 96 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 19 ரன்னில் தோற்று இருந்தது. அரை இறுதியில் நுழைய இந்தியாவை வீழ்த்த வேண்டிய நிலை அந்த அணிக்கு உள்ளது.

தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் ஹசிம் அம்லா, டுபெலிசிஸ், குயின்டன் டிகாக், மில்லர், கேப்டன் டிவில்லியர்ஸ் ஆகியோரும், பந்துவீச்சில் மார்னே மார்கல், இம்ரான் தாகீர், ரபடா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

இரு அணிகளும் அரை இறுதியில் நுழைய மிகவும் கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா: வீராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மர், தவான், யுவராஜ்சிங், டோனி, ஜேதர்ஜாதவ், ஜடேஜா, ஹர்த்திக் பாண்ட்யா, உமேஷ்யாதவ், புவனேஸ்வர்குமார், பும்ரா, அஸ்வின், தினேஷ் கார்த்திக், ரகானே, முகமது‌ஷமி.

தென்ஆப்பிரிக்கா: டிவில்லியர்ஸ் (கேப்டன்), ஹசிம்அம்லா, குயின்டன் டிகாக், டுபெலிசிஸ், மில்லர், டுமினி, கிறிஸ்மோரிஸ், பர்னல், இம்ரான்தாகீர், ரபடா, மார்னே மார்கல், பெகருதீன், கேசவ்மகராஜ், பெகல்வாயோ, பிரிடோரியஸ்.

Post a Comment

Previous Post Next Post