இப்தார் நிகழ்வொன்றில் துருக்கிய ஜனாதிபதி ரஜப் தய்யிப் அர்துகான் ஆற்றிய உரை
எமது புஜங்களில் சுமத்தப்பட்டுள்ள பணி சத்தியத்தின் பாதையில் பயணிக்கிறது. எம்மிடம் தேவைகளை கோருபவர்களுக்கு உதவி செய்துகொண்டு எமது பயணத்தை நாம் பூரணப்படுத்துவோம்.
அநியாயம் இழைக்கப்பட்டவனிடமிருந்து வரும் அபயக்குரலை ஒருபோதும் இலகுவாக தட்டிக்கழித்து விடாதீர்கள். ஏனெனில் அது பல மடங்காகப் பெருகி உங்களுக்கே திரும்பிவரும்.
கட்டார் சிறியதொரு நாடு என்று அவர்கள் கூறுகின்றார்கள். எனினும் அது சரியானதல்ல. மீண்டும் சொல்கிறேன். அது சரியானதொன்றல்ல. பின்வரும் அல்குர்ஆன் வசனம் அதனை மிகத் தெளிவாக சொல்கிறது.
“எத்தனையோ சிறிய குழுக்கள் பெருந்தொகையானோரைக் கொண்டிருந்த குழுவினரை அல்லாஹ்வின் உதவியால் வெற்றி கொண்டுள்ளன. அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்” (அல்-பகறா -249).
எனவே எம்மிடமுள்ள முழு சக்தியையும் சுமந்தகொண்டு இப்பாதையில் நடைபயில்வோம். பிராந்திய மக்கள் கஷ்டங்களை அனுபவிக்கவோ, புதிய சுமைகளை சுமக்கவோ நாம் அனுமதிக்கக் கூடாது. துருக்கி என்ற வகையில் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை, அதன் பாதுகாப்பு, சமாதானம் என்பவற்றின் பக்கமே நாம் நிற்போம்.
வேறுபாடுகள் பார்க்காமல் எமது சகோதரர்களுக்கு மத்தியில் காணப்படும் தடைகளை நீக்க, அவர்களுக்கு மத்தியிலுள்ள இணை நலன்களை நிறைவேற்ற நாம் எப்போதும் போராடுவோம்.
இன்று நாம் அந்த நோக்கத்தை நிறைவேற்றவே முனைகிறோம். மனிதர்கள் என்றவகையில் நாம் அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்ற முயற்சிக்கிறோம். அது என்ன கட்டளை தெரியுமா?
சூறதுல் ஹூஜுறாத்திலே அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்கள் சகோதரர்கள். அவர்களுக்கு மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்தி வையுங்கள்". இதுபோன்ற தருணங்களில் அதனை மேற்கொள்ளுமாறு அல்லாஹ் எமக்கு வழிகாட்டுகிறான்.
இங்கிருந்துதான் எமது பணி ஆரம்பிக்கிறது. கட்டார் நெருக்கடிக்கு தீர்வொன்றைக் காண்பதற்காக ராஜதந்திர ரீதியிலான செறிவான நடவடிக்கைகளில் நாம் இறங்கியிருக்கிறோம்.
பதின்மூன்றிற்கு அதிகமான தலைவர்களை நான் சந்தித்திருக்கிறேன். வெளிவிவகார அமைச்சில் பணியாற்றும் எமது சார்பில் பேசவல்ல அதிகாரிகளும் அவர்களை சந்தித்துள்ளனர். எமது முயற்சிகளுக்கான விளைச்சலை மிக விரைவில் நாம் காண்போம் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.
பெரும்பாலான முஸ்லிம்களை பாதிக்கின்ற பயங்கரவாத நிறுவனங்களின் திட்டங்களை எந்த வகையிலேனும் முறையடிக்க நாம் உடன்பாட்டுடன் பணியாற்றுவது எம்மீது கடமையாகும். கருத்துவேறுபாட்டுடனோ, முரண்பாட்டுடனோ அதனை அடைய முடியாது.
எமது தூதர் (ஸல்) அவர்கள் “இணைந்து பணியாற்றுவது ஒரு அருள். பிரிவினை ஒரு வேதனை” எனக் கூறியிருக்கிறார்கள். எமது தூதரின் உபதேசத்தை நாம் பின்பற்றுவது கடமையாகும். குறிப்பாக நாம் இப்போது வாழும் இந்த அருள்பொருந்திய நாட்களில் இது மிக விசேடமானதாகும்.
Mohamed Basir
Post a Comment