ஏ.எல்.எம். சத்தார்
அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் நாசகார நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக சந்தர்ப்பம் ஒதுக்கித் தருமாறு கோரும் கடிதம் ஒன்றை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையளித்தும் இதுவரையும் ஜனாதிபதியிடமிருந்து பதில் ஏதும் கிடைக்வில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் பள்ளிவாசல்களையும் முஸ்லிம்களது வர்த்தக நிலையங்களையும் இலக்கு வைத்து நடத்தப்பட்டு வரும் நாசகார செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்கே சகல அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து கடந்த மே மாதம் 19 ஆம் திகதி மேற்படி கடிதத்தை சமர்ப்பித்திருக்கிறார்கள்.
மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும் இது பற்றி ஜனாதிபதியிடமிருந்து எத்தகைய பதிலும் வழங்கப்படவில்லை என்று கவலை தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் 7 ஆம் திகதி ஜனாதிபதியால் பாராளுமன்றத்தில் கூட்டப்பட்ட ஆளுந் தரப்பினரின் கூட்டத்தின்போது நிகழ்ச்சி நிரலுக்குப் புறம்பாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் வன்முறைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். அதன்போது இதனைப் பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லையென்றால் அப்பொறுப்பை இராணுவத்திடம் கையளிக்க வேண்டியேற்படும் என்ற பதிலே ஜனாதிபதியிடமிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Post a Comment