(எஸ்.அஷ்ரப்கான்)
இன்றைய இலங்கை முஸ்லிம்களின் இழி நிலைக்கு முதலில் பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் பணத்துக்கும் பகட்டுக்கும் கட்சி போதைக்கும் மயங்கிய நிலையில் அரசியல் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முஸ்லிம் பொது மக்கள்தான் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
சமகாலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் பள்ளிவாயல் தாக்குதல்கள், தொடர் கடை எரிப்புக்கள் பற்றி ஆராயும் கட்சி உயர் மட்ட கூட்டத்தின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
எமது உலமா கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் ஒரு விடயத்தை சொல்லி வந்துள்ளோம். அதாவது நமது நாட்டில் பௌத்த சமயத்தலைவர்களின் ஆதிக்கம் அரசியலில் மிக அதிகமாக இருப்பதால் அவர்களோடு ஈடு கொடுத்து பேசும் அளவு நமது சமூகம், இஸ்லாம், மற்றும் அரசியல் அறிவு கொண்ட உலமாக்களை தமது பிரதிநிதிகளாகதேர்ந்தெடுக்க முன் வர வேண்டும் என்பதை. காரணம் சிங்கள மக்களின் சமயத்தலைவர்கள் தம்மோடு நேருக்கு நேர் பேசும் தகைமை உலமாக்களுக்கு உண்டு என்பதை ஏற்றுகொண்டுள்ளார்கள்.
ஆனால் நேர்மையான அரசியலை உலகுக்கு கற்றுத்தந்த முஹம்மது நபியின் வழி காட்டலை பின் பற்றுவதாக சொல்லும் முஸ்லிம் சமூகம் உலமாக்களுக்கு அரசியல் தேவையா என்று சொல்லி எம்மை கொச்சைப்படுத்தியதே தவிர, உலமாக்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பித்தான் பார்ப்போமே என கொஞ்சமும் உணரவில்லை. இதற்கான எமது முயற்சிக்கு உலமாக்களும் பெருவாரியாகஒத்துழைப்புத்தரவில்லை. காரணம் அதிகாரத்தில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளின் கடைக்கண் பார்வை தமக்கு கிடைக்காது போய் விடுமே என்றுதான் பெரும்பாலானோர் சிந்தித்தார்களே தவிர அழிவை நோக்கிச்செல்லும் சமூகம் பற்றி சிந்திக்கவில்லை.
அத்துடன் பொது மக்களும் பணத்துக்கும், கட்சி மயக்கத்துக்கும் மயங்கி மது, மாது, சூது என பச்சையாக சமூகத்தை ஏமாற்றும் போக்கிரிகளுக்கும் அவர்கள் கட்சிக்குமே வாக்களித்தார்கள். இப்போது தாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் கையாலாகாதவர்கள் என சமூக வலையத்தளங்களில் புலம்புகிறார்கள்.
மேலும் நாம் ஒரு விடயத்தை சொல்லி வந்தோம். பதவிகள் பெற வழியிருந்தும் பதவிகள் பெறாமல் சமூகத்துக்காக பாடுபடும் எதிர்க்கட்சி அரசியலையும் சமூகம் ஊக்குவிக்க வேண்டும் என. ஆனால் என்ன நடந்தது? இது பற்றி இந்த நாட்டு முஸ்லிம்கள் இன்பனமும் சிந்திக்கவில்லை.
அதற்கு மாறாக அரசாங்கத்தில் பதவிகளில் உள்ளோர் ஏன் அரசுடன் சண்டையிட்டு இனவாதத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது எனகேட்கிறார்கள். மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை என்றால் மீசையில் படாமல் கூழ் குடிக்க முடியாது. சமூகத்துக்கு அரச பதவி கொண்டவர்களும் வேண்டும் அவர்கள் தமக்காக பேசி கட்டுப்படுத்தவும் வேண்டும் என்றால் இது மிகப்பெரிய முரண்பாடாகும். நக்குத்திண்டவனால் நெஞ்சை நிமிர்த்தி பேச முடியாது என்ற சின்ன விடயம் கூட புரியாத சமூகமாக முஸ்லிம் சமூகம் உள்ளது. இதனால் ஏதோ பேசுவதாக சமூகத்துக்கு 'பே' காட்டுதல் நடக்கிறது. அந்த அற்ப திருப்தியில் சமூகம் கனவுலகில் மிதற்கிறது. இங்கு நனவுலகில் தே க அரசின் பலத்த ஆதரவுடன் தினமும் சதிகள் நடக்கின்றன.
ஆகவே இவ்வாறு உலமா கட்சியின் அரசியல் வழி காட்டலையும் கருத்துக்களையும் ஏற்காமல் தம் இஷ்டப்படியும் எம்மைக்கண்டு அஞ்சும் அரசியல்வாதிகளின் எமக்கெதிரான நக்கல் நையாண்டிகளையும் பார்த்து ஏமாந்த முஸ்லிம் சமூகமே இந்த அநியாயங்களுக்கான முதன்மை பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதை இறைவனை சாட்சியாகவைத்து உலமா கட்சி சொல்வதோடு இனியாவது சமூகம் திருந்தவேண்டும் என கேட்டுக்கொள்கிறது.
Post a Comment