மக்களுக்கு சேவை செய்கின்ற விடயத்தில் சில அரசியல்வாதிகள் மக்களோடு மக்களாக இணைந்து களத்தில் நின்று செயலாற்றுவர்.சிலர் சட்டையில் அழுக்குப் படாமல் ஏசி அறைக்குள் இருந்து கொண்டு உத்தரவை மாத்திரம் இடுவர்.
களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி எம்பியும் பிரதி அமைச்சருமான பாலித தேவரப்பெரும முதலாம் ரகத்தைச் சேந்தவர்.மக்களுக்கு ஏதும் என்றால் உடனே காலடியில் நிற்பவர்.
அழுத்கமவில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தின்போது துணிந்து நின்று முஸ்லிம்களைக் காப்பாற்றியது மாத்திரமன்றி அதற்காக பேரினவாதிகளின் தாக்குதலுக்கும் உள்ளானார்.
அந்த மாவட்டத்தில் முன்பு ஒரு தடவை வெள்ளம் ஏற்பட்டபோது அவர் களத்தில் நின்று சேவை செய்தது மாத்திரமன்றி வெள்ளம் வழிந்தோடிய பிறகு பல வீடுகளைத் தன் கைகளினாலேயே கழுவிச் சுத்தம் செய்தும் கொடுத்தார்.
இந்தத் தடவை ஏற்பட்ட வெள்ளத்தின்போது முன்பைவிடவும் வேகமாக அவர் செயற்பட்டார்.உணவுப் பொருட்களை-தண்ணீர் போத்தல்களை அவர் சுமந்து சென்று மக்களிடம் கொடுக்கும் காட்சியும் உயிரிழந்த உடல்களை சுமந்து செல்லும் காட்சியும் ஊடகங்களில் வெளியாகி அவரை ஒரு ஹீரோவாக ஆக்கின.
ஆனால்,ஏசி அறைகளில் இருந்து உத்தரவை மாத்திரம் இடும் அந்த இரண்டாம் ரக அரசியல்வாதிகளுக்கு இவரது செயல் பொறாமையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு களத்தில் நிற்கும் அரசியல்வாதிகள் பக்கம் மக்களின் மனம் திரும்புவதால் தங்களின் அரசியல் பிழைப்புக்கு ஆப்பு விழுந்துவிடும் என்று அஞ்சிய அந்த அரசியல்வாதிகள் தேவரப்பெருமவின் செயலை வெளிப்படையாகவே விமர்ச்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
அவ்வாறு விமர்ச்சித்தவர்களுள் ஒருவர்தான் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ.அனர்த்தம் ஏற்பட்டதன் பின் சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு-பொருட்களை சுமந்து திரிந்து சேவை செய்வது அர்த்தமற்றது.
இவ்வாறான அனர்த்தங்கள் வருவதற்கு முன் மக்களைக் காப்பாற்றும் வகையில் திட்டம் வகுத்து சேவையாற்றுவதுதான் பொருத்தமான சேவையாகும் என்று அவர் கூறியுள்ளார்.
தேவரப்பெருமவின் அந்த அர்ப்பணிப்புமிக்க சேவையைக் கொஞ்சம்கூடப் பாராட்டாமல்-தனது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் என்று கூடப் பார்க்காமல் இவ்வாறு விமர்ச்சிக்கும் அளவுக்கு அமைச்சருக்கு எவ்வளவு தூரம் வயிறு பற்றி எரிகிறது பாருங்கள்.
[எம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர்]
Post a Comment