அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
பிரிட்டன் நாடாளுமன்றத்திந் ஆயுள் காலம் 2020-ம் ஆண்டு வரை இருந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு நாட்டில் வலிமை வாய்ந்த, நிலையான தலைமை தேவை என்று கூறி திடீர் தேர்தலை நடத்திய பிரதமர் தெரசா மே தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவியது.
மொத்தமுள்ள 650 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், 4.6 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகின்றது.
இதுவரை கிடைத்துள்ள முடிவுகளின் அடிப்படையில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்பது உறுதியாகி விட்டது. அக்கட்சி தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கிறது.
முன்னதாக வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 314 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 266 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ஆட்சியமைக்க தேவையான 326 இடங்களை எந்த கட்சியாலும் பெற முடியாது எனவும், தொங்கு பாராளுமன்றம் அமையும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போதைய தகவலின்படி இரண்டு கட்சிகளும் தலா 219 இடங்களைப்பிடித்து யார் வெற்றி பெறுவது என்ற போட்டியில் உள்ளன.
Post a Comment