Top News

இறக்குமதி அரிசியினதும் உள்ளுர் அரிசியினதும் உச்ச சில்லறை விலையை சமப்படுத்த ரிஷாட்டிடம் கோரிக்கை





இறக்குமதி அரிசியின் ஆகக்கூடிய சில்லறை விலையையும் உள்ளுர் அரிசியின் ஆகக்கூடிய சில்லறை விலையையும் ஒரே விதமாக பேணுவதன் மூலம் சந்தையில் ஏற்படும் குளறுபடிகளையும் மோசடிகளையும் தவிர்க்க முடியும் என்று கொழும்பில் இயங்கி வரும் பலம் வாய்ந்த சங்கமான கொழும்பு வர்த்தகர்கள் சங்கம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

வர்த்தகர் சங்கத்தின் பிரதிநிதிகள், அமைச்சரை சந்தித்து சந்தையில் தாங்கள் எதிர்நோக்கும் பல்வேறு இடர்பாடுகள் பற்றி எடுத்துரைத்தனர்.
'இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான இறக்குமதித் தீர்வையை சிறிதளவில் அதிகரித்து சந்தையில் விற்கப்படும் இறக்குமதி, உள்ளுர் அரிசியின் ஆகக்கூடிய சில்லறை விலையை சமப்படுத்த வேண்டும்.

இறக்குமதி செய்யப்படும். ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பில் சர்வதேச சந்தையின் அவ்வப்போதைய நிலவரம், டொலர் பெறுமதியின் காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன் மூலம் சந்தையில் வழங்குனர்களையும், நுகர்வோர்களையும் பாதிக்காத தன்மையை ஏற்படுத்த முடியும்;. இவ்வாறு; அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் வர்த்தகர் சங்கம தெரிவித்தது.

'சந்தையில் ஏற்படும் பல்வேறு சிக்கல்களை எனது கவனத்திற்கு கொண்டு வந்தமைக்காக நன்றிகளை கொழும்பு வர்த்தக சங்கத்திற்கு தெரிவிக்கின்றேன். அத்தியவசிய பொருட்களுக்கான ஆகக்கூடிய விலை நிர்ணயம் எனது அமைச்சுடன் மட்டும் சம்பந்தப்பட்ட ஒன்றல்ல. அரச உயர் மட்டத்தின் வழிகாட்டல், அறிவுறுத்தல் மற்றும் வாழ்க்கைச் செலவு உபகுழுவின் தீர்மானங்கள் மற்றும் எனது அமைச்சின் கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் நடவடிக்கைகள் ஆகியவை ஒருமுகப்படுத்தப்பட்டே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது'
என்று தெரிவித்த அமைச்சர் ரிஸாட் 'நீங்கள் தெரிவித்த இந்த அனைத்து விடயங்களையும் எழுத்து மூலம் வர்த்தகர் சங்கத்தின் சிபாரிசுடன் கையளித்தால் மேன்மட்டத்திற்கு கொண்டு சென்று இது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கமுடியும்' என்றார்.

கொழும்பு வர்த்தகர் சங்கம் 210 அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு பலமான சங்கமாகும். அரசாங்கத்திற்கு 90சதவிதமான வரியை பில்லியன் கணக்கில் செலுத்தி வருகின்ற அநேக வியாபார நிறுவனங்கள் எமது சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கின்றன. நாங்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றோம். காசோலை மூலம் நடைபெறும் கொடுக்கல் வாங்கல்களால் வயாபார நடவடிக்கையில் இழுத்தடிப்புக்கள் இடம்பெறுகின்றன. இதனால் வியாபாரத்தை முடக்கவேண்டிய நிலையும்  நேரிடுகின்றது என்றும் அமைச்சரிடம் வர்த்தக சங்கத்தின் தூதுக்குழுவினர் தெரிவித்தனர்.

'இற்றைவரை காலமும் நுகர்வோரின் பாதுகாப்பு மற்றும் நன்மைகள் தொடர்பாகவே கூடிய  கவனம் செலுத்தி வந்த நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடமும் என்னிடமும் முதன் முறையாக இவ்வாறான ஒரு பிரச்சினை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு நுகர்வோரும் வழங்குனர்களும் பாதிக்கப்படாத வகையில் உரிய தீர்வை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அமைச்சர் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில் வர்த்தக சங்கத்தின் உப தலைவர் எஸ்.எம்.சனீர், வர்த்தக சங்கத்தின் தலைவர் வை.எம். இப்றாகிம், செயலாளர் சூரியர் உட்பட முன்னணி வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் என பலர் பங்கேற்று இருந்தனர்.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஜீவானந்தம் உட்பட அதிகாரிகளும் பங்கேற்றியிருந்தனர்.


ஊடகப்பிரிவு

Post a Comment

Previous Post Next Post